தமிழில் உச்சரிப்பில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகக் கேட்கக்கூடிய, ஆனால் முற்றிலும் வேறுபட்ட பொருள்களைத் தரும் நுட்பமான ஒலி வேறுபாடுடைய எழுத்துகள் மயங்கொலி எழுத்துகள் எனப்படும். இதை போலவே தமிழில் சில எழுத்துகள் வேறுபடுவதால் பொருள் மாறுபாடும் ஏற்படுகிறது. இதை அறியாதவர்கள் தவறாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு சில சொற்களை நாம் இங்கு காண்போம். புத்தகத்தை கறையான் அரித்ததா? இல்லை கரையான் அரித்ததா? சிலர் இதைக் கரையான் என எழுதுவர். அது தவறு, கறையான் என்பதே சரி. 'கறை' என்றால் அழுக்கு, களங்கம். குறைபாடு எனப் பொருள் உண்டு. பழங்காலத் தமிழ் நூல்களை கறையான் அரித்ததால் நம் தமிழ் மொழிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை செல்லரித்துவிட்டது எனக் கூறுவர். சிதல், செல் என்பன கறையானைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொற்கள். ஈரம் பட்டு புழங்காது மூலையில் கிடந்தவற்றையும், மண் தரையில் கவனிக்காது போட்டவற்றையும் கறையான் அரித்துவிடும். பதிற்றுப்பத்தில் முதற்பத்தும், இறுதிப்பத்தும் மட்டும் கிடைக்கவில்லை. இதிலிருந்து கறையான் மேலிருந்தும் கீழிருந்தும் அரித்துக் கொண்டே வரும். என்பதற்கு பதிற்றுப்பத்தே சான்று. கூடையை மிடைதலா? முடைதலா? புதுமலர் மிடைந்த மாலை: என குறுந்தொகை 273 பாடல் நெருக்கிக் கட்டிய மாலையை குறிப்பிடுகிறது. மிடைதல் என்றால் செறிதல், நெருக்குதல், கலத்தல் என்ற பொருள் தரும். மணி மிடை பவளம் (அகம் 304) முள் மிடைக் குடம்பை (அகம் 270) ஆகிய பாடல்களில் மிடை என்பது கலந்துக் கட்டிய பவள மாலை எனவும், நெருக்கிக் கட்டிய பறவைக்கூடு எனவும் பொருள் தரும். பாய் மிடைதல், தடுக்கு மிடைதல், கட்டில் மிடைதல், கூடை மிடைதல் என நெருக்கமாக கட்டிப் பின்னுதலை குறிக்கும். முடைதல் பேச்சு வழக்குச் சொல். எனவே எழுதும் போது பேச்சு வழக்கை விடுத்து எழுத்து வழக்கில் மிடைதல் என்பதையே நாம் பயன்படுத்துவோம். மனம், மனது இவற்றில் எது சரி? 'பழையது' 'பழசு' என ஆனது போல 'மனம்' 'மனசு' 'மனது' எனப் பேச்சுத்தமிழில் உருமாறியது. திருவள்ளுவர் மனம் என்றே கையாள்வார். சங்கப்பாடல்களில் 'மனம்', 'மனத்தது', 'மனத்தர்', 'மனத்தேம்', 'மனத்தை' என்றே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனம் + இல் = மனத்தில் என வரும்; மனம் + ஐ என்று வராது. இங்கு அத்து சாரியை பெற்று மனத்தை என்றே வரும். பலர் இன்று மனதை, மனதில், மனதுக்குள் என எழுதுவது பேச்சுவழக்கை ஒட்டி எழுதுவனவாகும். இன்னும் மேலே போய் மனஸ், மனசு என எழுதுவதெல்லாம் பிழையாகும். 'மன்' எனில் 'நிலைபேறு' இதுவே மன்னுதல், மனம், மனிதன், மனுகுலம், மனு நீதிச்சோழன், மானுடம் என்பவற்றிற்கெல்லாம் வேர்ச் சொல்லாகும். தொல்காப்பியர் ஆறு அறிவுள்ள உயிர்களை வரிசைப்படுத்துவார். அதில் "ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே" என்பார். தமிழில் மனம், மனன் என வரும். திருவளர் செல்வனா? திருவளர்ச்செல்வனா? எது சரி? சில அச்சுகளில் இவ்வகையான பிழைகளை காணக்கூடும். இதை திருவளர் செல்வன் என்றுதான் எழுத வேண்டும். வளர் என்பது வினைத்தொகை. அதாவது மூன்று காலத்தையும் குறிக்கும் சொல், வளர்ந்த, வளர்கின்ற, வளரும் என்பதை குறிப்பதாகும். இங்கு 'ச்' சேர்த்தால் வளர்ச்சி தடைபடும் சொல்லாக மாறிவிடும், எனவே திருவளர் செல்வன். திருவளர் செல்வி, திருநிறை செல்வன், திருநிறை செல்வி என்றே எழுத வேண்டும். திருவளர் செல்வன் என்பதற்கும் திருநிறை செல்வன் என்பதற்கும் என்ன வேறுபாடு என்று தெரியுமா? ஒரு திருமணப் பத்திரிக்கையில் திருவளர் செல்வன் என போட்டிருந்தால், அந்த வீட்டில் இன்னும் மணம் முடிக்கப்பட வேண்டியவர்கள் உள்ளனர் எனப் பொருள். திருநிறை செல்வன் என போடப்பட்டால் இனி மணம் முடிக்க வேண்டியவர் எவரும் இல்லை எனப் பொருள். எனவே திருவளர் செல்வனா? திருநிறை செல்வனா? என எதுவாகிலும் 'ச்' சேர்க்காமல் எழுதிட வேண்டும். இந்த கடையில் தேநீர், தேனீர் நன்றாக இருக்கும்! எது சரி? தேநீர் - ஆங்கிலத்தில் "டீ" என வழங்கப்பட்ட சொல் தமிழில் "தே' எனக் கொள்ளப்பட்டது. தே + இலை = தேயிலை. தேயிலையை வெந்நீரில் இட்டு வடிக்கும் நீர் தேநீர். இது தமிழில் தேத்தண்ணீர் எனவும் வழங்கப்படும். இதை தேனீர் என வழங்குதல் தவறு. தேநீர்க்கடை என்பதே சரியான வடிவம். இதை தேனீர்க்கடை என எழுதினால் தேன் + நீர் + கடை என்ற பொருள் தந்துவிடும். உனக்கு ஐநூறு வேண்டுமா? ஐந்நூறு வேண்டுமா? ஐந்நூறு = ஐந்து + நூறு - ஐந்நூறு; ந் + ஊ வரும்போது 'நூ' மட்டும் மிக வேண்டும். இதை பலரும் ஐநூறு என எழுதிவிடுகின்றனர். இது தவறு. ஐநூறு என்றால் பிரியும் போது 'ஐ' 'நூறு' எனப் பிரியும். ஐ என்பது வியப்பை உணர்த்தும் உரிச்சொல். ஐ எனக்கு நூறு என்று வியப்பில் கூறுவது போன்றிருக்கும். எனவே நமக்கு ஐந்நூறு தான் வேண்டும். எந்தன், என்றன் இவற்றை எப்படி கையாள்வது? எந்தன், என்றன் - 'என்றன்' என்ற சொல் இலக்கியப் படைப்பாளிகள் முதல் அனைவராலும் 'எந்தன்' என்றே எழுதப்பட்டு வருகிறது. என்றன் என்பது ஒருமை. எந்தம் என்பது பன்மை. "என்றன் இதயம் வலித்தது", " என்றன் கண்கள் இருண்டது" என்றும், "எந்தம் மக்கள் மிகவும் நல்லவர்", "எந்தம் குழு சிறப்பு" என்றும் எழுத வேண்டும். ஓட்டை வடைக்கு உளுந்து வேண்டுமா? உழுந்து வேண்டுமா? உழுந்தை உழுந்து என எழுதுவதே சரியானது. இதைப் பலர் உளுந்து என எழுதுவர். இது தவறாகும். உழுந்தங்களி மிகவும் சுவையுடையது. "உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகம் 86) உழுந்தங்களியைப் பற்றி பேசியுள்ளது. "உழுந்து உடை கழுந்தின் (குறு 384)" தடி வைத்து உழுந்தை பிரித்த விபரத்தை சொல்லும். "நெய்யோடு மயக்கிய உழுந்து நூற்றன்ன (ஐங் 211)" என உரைப்பது நெய்யோடு உழுந்து மாவைக் கலந்து, பிசைந்து நன்கு உருட்டி, நீளமாய் கொடி போல இழுத்து வளையம் போலச் செய்வதைச் சொல்லிற்று. அதாவது நாம் இன்று செய்யும் முறுக்கு, தேன்குழல் செய்முறையைச் சொல்லிய பாங்கு இனிமையே. சங்கப்பாட்டு முறுக்கு செய்யும் முறையை சொல்வது சுவையாக இருக்கிறதல்லவா? உழுந்த வடையும் உலகப் புகழ் பெற்றது. உடலுக்கு வலிமை தருவது. இன்று உங்கள் குளியல் வென்னீரிலா? வெந்நீரிலா? தமிழில் பண்புத் தொகை புணர்ச்சி என உண்டு. அதாவது தண்மை + நீர் = தண்ணீர்; 'தண்' எனில் தமிழில் 'குளிர்ச்சி என்பது பொருள். எனவே நீர் என்பது செம்புலப் பெயல் நீர் போல எதிலும் கலந்துவிடும் என்பதால் நன்மை + நீர் = நன்னீர்; வெம்மை + நீர் = வெந்நீர் என்று தான் எழுத வேண்டும். தருவாய், தறுவாய் இதன் பொருள் அறிவோம்! தருவாய் (இடையின 'ர'): இது 'தருதல்' (கொடுத்தல்) என்ற வினைச்சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'நீ கொடுப்பாய்' என்று பொருள். தறுவாய் (வல்லின 'ற'): இது காலத்தைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல். இதற்கு 'சமயம்', 'நேரம்', 'கால எல்லை' அல்லது 'கட்டத்தை' நெருங்கும் நிலை என்று பொருள். "சாகுந்தறுவாயில் கிடப்பவற்கு உதவுவது பெரும் புண்ணியம்": இங்கு 'சாகுந்தறுவாய்' என்பது உயிர் பிரியும் கடைசி நேரத்தை அல்லது கால எல்லையைக் குறிக்கிறது. "படம் முடியும் தறுவாயில் புறப்பட்டு விட வேண்டும்". எனவே, கால எல்லையை குறிக்கும் இடங்களில் "தறுவாய்" என்பதையே பயன்படுத்த வேண்டும். அருவெறுப்பா? அருவருப்பா? எது சரி? அருவெறுப்பு என்பது தவறு. பலநாள் குளிக்காதவன் பக்கத்தில் வந்தால் வியர்வை நாற்றம் அருவருப்பாக இருக்கும். உடம்பில் படத்தகாதது பட்டுவிட்டால் அருவருப்பாக இருக்கும். அருவருத்தலால் முகம் சுளித்து, வெறுத்து புறம் போக தோன்றும். அருவருப்பு என்பதே சரி. அருவெறுப்பு என்ற ஒரு சொல் இல்லை. 'கண்ணுக்குள் தூசி விழுந்தால் ஏதோ அருவுவது' போல இருக்கும் அராவுதல், அருவுதலிலிருந்து அருவருப்பு உள்ளத்தில் ஏற்படும். அருவுவது போன்ற ஒரு வெறுப்புணர்வு, சொல் வடிவம் பெற்றுள்ளது அதை அருவருப்பு என்றே எழுத வேண்டும். அறிக்கை, அறிவிக்கை வேறுபாடு காணலாமா! அறி என்பது தன்வினை அறிக்கை அறிவிப்பது என்பது தானே அறிவிப்பது; அறிவி என்பது பிறவினை, ஒன்றன் மூலம் அல்லது ஒருவர் மூலம் அறிக்கை செய்வது அறிவிக்கை ஆகிவிடும். நாளிதழ்களில் வரும் வேலை வாய்ப்புச் செய்திகள் அறிவிக்கை ஆகிறது. அறிக்கைக்கும் அறிவிக்கைக்கும் மிக மெல்லிய இடைவெளி உள்ளது, அதைத் தெரிய ஓர் உதாரணம்:- "இனிமேல் ஒற்றைத் தலைமைதான்" என்று அறிக்கை செய்தார். இதையே ஒருவர் மற்றவரிடம் கூறும்போதோ அல்லது செய்தியாக வெளியிடும் போதோ "இனிமேல் ஒற்றைத் தலைமை தான்" என அறிவிக்கை செய்தார் என்பதே சரி