விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் வளர்ச்சி இந்தியாவின் விண்வெளிப் பயணம் 1963-ல் கேரளத்தின் தும்பாவிலிருந்து ஏவப்பட்ட சிறிய ராக்கெட்டுடன் தொடங்கியது. இன்று சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் நாடு முன்னேறி வருகிறது. இஸ்ரோ உருவாக்கிய தொலைத்தொடர்பு, புவி கண்காணிப்பு, வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. மீனவர்கள், விவசாயிகளுக்கு உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனங்கள், புத்தொழில் அமைப்புகளின் பங்களிப்புடன் அதிநவீன தொழில்நுட்பங்கள் விண்வெளித் துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த தலைமுறை ராக்கெட்டுகள் மற்றும் மறுபயன்பாட்டுத் தொழில்நுட்பம் விண்வெளி ஏவுதளத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளை உருவாக்க 2024 செப்டம்பரில் மத்திய அமைச்சரவை ரூ.8,240 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளித்தது. புவியின் தாழ்வட்டப் பாதைக்கு 30 டன் வரையிலான எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்படுகிறது. மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தை நிலைநாட்ட புஷ்பக் சோதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன. வளிமண்டலக் காற்றைப் பயன்படுத்தும் ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்திய நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேம்பட்ட உந்துவிசை மற்றும் விண்வெளி இணைப்பு செயற்கைக்கோள்களின் எடையைக் குறைத்து அதன் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிக்க மின்சார உந்துவிசைத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 300 மில்லி நியூட்டன் பிளாஸ்மா உந்துவிசை அமைப்பின் 1,000 மணி நேரச் சோதனை 2025 மார்ச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுற்றுப்பாதையில் இரு விண்கலங்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் சோதனையை 2025-ல் வெற்றிகரமாக நிகழ்த்தி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. இதன் மூலம் எதிர்காலத்தில் விண்கலங்களுக்கு விண்ணிலேயே எரிபொருள் நிரப்புதல், பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வழிகாட்டல் மற்றும் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்கள் இந்தியாவின் சொந்த வழிகாட்டல் கட்டமைப்பான நேவிக், உள்நாட்டிலும், எல்லையைத் தாண்டி 1,500 கிலோமீட்டர் வரையிலும் மிகத் துல்லியமான இருப்பிடத் தகவல்களை வழங்கி வருகிறது. தரைவழி, வான்வழி, கடல்சார் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, கடலில் நீண்ட தொலைவுக்கு பயணிக்கும் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை குறித்த செய்திகளை அனுப்பவும் இது பயன்படுகிறது. தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பிற்கான ஜிசாட்-24, அதிவேக இணைய இணைப்புக்கான ஜிசாட்-20, இந்தியக் கடற்படை பயன்பாட்டிற்கான பிரத்யேக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்கள் விண்வெளித் தகவல் தொடர்புக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன. புவி கண்காணிப்புப் பிரிவில் நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் 2025 ஜூலையில் விண்ணில் ஏவப்பட்டு, அனைத்து வானிலைச் சூழல்களிலும் இரவு பகல் அனைத்து நேரங்களிலும் துல்லியத் தகவல்களை வழங்கி வருகிறது. விண்வெளிப் பொருளாதாரமும் தற்சார்பு இலக்கும் 2033-க்குள் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட விண்வெளிப் பொருளாதாரத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்கள் நாட்டின் விண்வெளித் திறனை மேம்படுத்துவதோடு, தற்சார்பு பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329355®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்