அறிமுகம் செயல்முறைத் திட்டம் என்பது மற்ற முற்போக்கான முறைகளைப் போல் கல்வித்திட்டத்தில் தற்கால சிந்தனையாளர்களின் முக்கிய பங்களிப்பு ஆகும். செயல்முறைத்திட்டம் மாணவர்களுக்கு அதிகமான செயல்களை செய்ய வாய்ப்பளிக்கிறது. இத்திட்டம் செயல் வழிக் கற்றலையும் வாழ்க்கைப் பிரச்சனைகளை நடைமுறைக்கு ஏற்றாற்போல் கையாளவும் வழிவகுக்கிறது. செயல்முறைத் திட்டம் என்பது புத்தகத்தில் மட்டுமே பெறக்கூடிய அறிவுக்கு எதிரான புரட்சித்திட்டம் ஆகும். இம்முறையில் விரிவான தொடர்வுகள் இருப்பதால், இவை பல செயல்களுக்கான செயல்முறைத் திட்டங்களைக் கொண்டுள்ளது. நாடகம், மாதிரிகளை உருவாக்குதல், வரைபடம் மற்றும் படம் வரைதல், படங்கள் சேகரித்தல், செய்தித்தாள்களின் வெட்டிய பகுதிகள் ஒட்டிய புத்தகம் (SCrap books), சுற்றுலா செல்லுதல் போன்ற செயல்கள் குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாக கற்றலை அதிகப்படுத்துகிறது. வரையறை J.A. ஸ்டீவன்சன் கூற்றுப்படி, "செயல்முறைத் திட்டம் என்பது சிக்கலான செயலை அதன் இயற்கை சூழலுக்கேற்ப எடுத்துச் சென்று முடிப்பதாகும். வில்லியம் கில்பாட்ரிக்கின் கூற்றுப்படி, "செயல்முறைத் திட்டம் என்பது குறிப்பிட்ட நோக்கமுள்ள செயலை முழு மனதுடன், சமூகச்சூழலில் நடைமுறைப்படுத்தப்படும் செயலாகும். செயல்முறைத் திட்டத்தின் கொள்கைகள் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவு குழந்தை தன்னுடைய குறிக்கோளை உணர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.ஏன் இவ்வாறு சில செயல்களை செய்கிறான்?’ என குழந்தைக்கு ஒரு எண்ணம் ஏற்படலாம். அர்த்தமில்லாத செயல்களால் ஆர்வத்தை ஏற்படுத்த முடியாது. செயலை அடிப்படையாகக் கொண்டது : குழந்தைகள் இயற்கையாகவே சுறுசுறுப்பானவர்கள். எனவே அவர்கள் சுறுசுறுப்பாக செயல்களை செய்வதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி பொருட்களை செய்து பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள செய்யவேண்டும். உடல் மற்றும் அறிவு சம்பந்தமான செயல்கள் கொடுக்கப்பட வேண்டும். இச்செயல்களை செய்ய அவர்களை அனுமதிப்பதோடு, செயல் மூலம் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும். அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது : அனுபவமே நல்ல ஆசான். அனுபவத்தின் மூலம் குழந்தைகள் புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள உதவும். சமூக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை : குழந்தை சமூகத்தின் ஒர் உயிருள்ள அங்கம். எனவே, சமூக வாழ்க்கைக்கு ஏற்றபடி அவனை/அவளை தயார் செய்ய வேண்டும். செயல்முறைத் திட்ட முறையில், குழந்தை குழுக்களாக வேலை செய்வர். உண்மையை அடிப்படையாகக் கொண்டது : வாழ்க்கை ஒர் உண்மை. எனவே, கற்றுக் கொடுக்கும் கல்வியும் அர்த்தமுள்ளதாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். உண்மையான வாழ்க்கை வாழ குழந்தையை அதற்கேற்றாற் போல் தயார் செய்ய வேண்டும். சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது : குழந்தைக்கு முழு சுதந்திரம் கிடைப்பதால் தன்னை முழுவதுமாக, சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகிறது. அவன் தன்னுடைய செயல்களை தேர்ந்தெடுக்க சுதந்திரமும், அச்செயல் அவனுடைய ஆர்வம், தேவை மற்றும் திறனுக்கேற்றவாறு அமைக்கப்படவும் வழிவகுக்கிறது. பயன்படும் முறையை அடிப்படையாகக் கொண்டது : அறிவை நடைமுறைக்கு ஏற்றாற் போல் பயன்படுத்தினால்தான் அது உபயோகமானது. பழமையான முறையில் கல்வி அளிப்பதன் மூலம் முறையான மற்றும் வாய் வழியான செய்திகளைக் கொடுப்பதோடு குறைந்த பயனையே கொடுக்கிறது. செயல்முறைத் திட்ட முறை பல்வேறு எண்ணங்களையும், கருத்து மதிப்பீடுகளையும் உருவாக்குகிறது. இவை நடைமுறையில் பார்க்கும் போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. செயல்முறைத் திட்டத்தின் படிகள் 1. வேலைக்கான சூழலை அளித்தல்: ஒரு செயல்முறை திட்டத்தை எடுத்தக் கொள்ள, ஆசிரியர் ஒரு உண்மையான நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவை மாணவர்களின் அறிவு, உடல், சமூக, பொருளாதார மற்றும் வரம்பிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். செயல்முறைத் திட்டம் என்பது தனியான அல்லது குழு செயல்பாடுகளாக இருக்கலாம். 2. தேர்ந்தெடுத்தல் மற்றும் நோக்கம் : தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறைத் திட்டம் தெளிவான தேவை அல்லது நோக்கத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்நோக்கம் முடிந்த அளவு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டுமேயொழிய, தன்னுடைய கருத்துக்களை திணிக்கக் கூடாது. குழந்தைகள் செயல்முறைத் திட்டத்தை தாங்களே தேர்வு செய்வதாக நினைக்கச் செய்ய வேண்டும். 3. திட்டமிடுதல் : தெளிவான திட்டமிடல் நல்ல முடிவுகளைக் கொடுக்கும். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய ஆலோசனைகளைக் கொடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு மாணவர் கொடுக்கக்கூடிய திறன்கள் அல்லது வளங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டமிடுதல் தொடர்பான செய்திகளுக்கேற்றபடி சில திட்டங்களைமுன்னரே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எனவே, மாணவர்கள் நல்ல முறையில் பிரச்சனையைக் கையாள இவை உதவும். 4. திட்டத்தை நிறைவேற்றுதல் : இந்தப்படி தான் மற்றவைகளை விட நீளமானது. அதிக வேலைகள் உள்ளதும் ஆகும். முழு செயல் திட்டமும் அனைத்து மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் முயற்சியால் நிறைவேற்றப்பட வேண்டும். செயல்முறைத் திட்டத்தின் பல்வேறு செயல்பாடுகள் வகுப்பில் உள்ள வேறுபட்ட குழந்தைகளின் ஆர்வம் மற்றும் திறனைப் பொறுத்து பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் தான் மாணவர்கள் பல செயல்களில் ஈடுபட்டு உபயோகமான பல்வேறு அனுபவங்களைக் கற்கிறார்கள். செய்திகளை சேகரிப்பது, வெவ்வேறு மொழிகளைப் படித்தல், எழுதுதல், கணக்குகளை பதிவு செய்தல், விலைகளை கணக்கிடுதல், வரைபடத்தைப் பார்த்தல், வெவ்வேறு வகையான பொருட்களின் உருமாதிரிகளை சேகரித்தல், இடப்பரப்பின் நீளத்தை அளத்தல், அங்காடிகள், மிருக காட்சி சாலைகளை பார்வையிடல், வயல்வெளிகள் மற்றும் விளைச்சல் நிலங்களை சென்று பார்த்தல் போன்றவற்றில் குழந்தைகள் தங்களை சுறுசுறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்வர். 5. மதிப்பிடுதல் : வேலைகள் முடிவுற்றவுடன், திரும்ப ஆய்வு செய்யப்பட வேண்டும். செயல்முறைத் திட்டத்தின் பல்வேறு படிகளில் நடந்த தவறுகள் அறியப்பட்டு பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். செயல்முறைத் திட்டத்தின் மூலம் எவை கற்றுக் கொள்ளப்பட்டன என்பதை மாணவர்கள் கண்டறிய வேண்டும். 6. பதிவு செய்தல் : செயல்முறைத் திட்டத்தின் தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் முழுவதுமாக பதிவு செய்யப்பட வேண்டும். செயல்முறைத் திட்டத்தின் பயன்கள் கற்றல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இவை உளவியல் ரீதியான கற்றலின் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. கற்றலுக்கு தயாராகும் விதி. இவ்விதியின் படி நம்முடைய மனம் அறிவைப் பெறுவதற்கு தயாரானவுடன் தான் கற்றல் நடைபெறும்.செயல்முறைத் திட்டம் மாணவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி அவர்களின் உள்ளத்தை கற்பதற்குத் தயாராக்குகின்றது. பயிற்சி விதி : கற்றல் என்பது பயிற்சியின் மூலம் தான் செயலாக்கப்படுத்தப்படுகிறது. செயல்முறைத் திட்டம் மாணவர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி அவர்களின் உள்ளத்தை தயாராக்குகிறது. 9 விளைவு பற்றிய விதி:இவ்விதிப்படி கற்கும் நிலை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் போது கற்றல் என்பது சக்தி வாய்ந்ததாகவும், பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். மாணவர்கள் தங்கள் செயல்களைத் தாங்களே மாற்றி அமைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். வாழ்க்கை தொடர்புடையது வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய அர்த்தமுள்ள மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கமுள்ள செயல்களில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படும் போது கற்றல் உண்மையான அனுபவமாகிறது. வாழ்க்கையின் உண்மையான பிரச்சனைகளுடன் தொடர்பு கொள்ள குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அனைத்து பாடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது : செயல்முறைத் திட்டம் பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. உறுதியான நோக்கத்துடன் செயல்படுகின்ற செயல்களுக்கு கற்றல் ஒரு துணைப்பொருளாக கிடைக்கிறது. ஜனநாயக முறைப்படி வாழ பயிற்சி அளிக்கிறது. இம்முறை ஒரு பொதுவான நோக்கத்திற்காக மாணவர்கள் ஒற்றுமையான வேலை செய்யப் போதுமான பயிற்சியளிக்கிறது. குடியுரிமைக்கான பயிற்சியை அளிக்கிறது : அடிப்படை பண்புகளான சகிப்புத் தன்மை, சுதந்திரம், திறந்த மனதுடன் செயல்படுதல், திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை மாணவர்களிடம் அக்கறையுடன் கற்பிப்பதில் பயிற்சி அளிக்கிறது. வேலையின் மதிப்பினை உறுதிப்படுத்துகிறது : வேலையின் மதிப்பினை உயர்த்த செயல்முறைத் திட்டத்தின் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுடைய கைகளாலேயே செய்யும் போது வேலை செய்வதில் ஒரு உயர் பண்பினை கற்றுக் கொள்வர். பிரச்சனையை சரிசெய்வதில் முக்கியத்துவம் கொடுக்கிறது : மனப்பாடம் செய்து மனதில் நிலை நிறுத்தும் முறையை செயல் முறைத்திட்ட முறை ஊக்குவிப்பதில்லை. பிரச்சனையை தீர்க்கும் முறையை கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. மாணவர்களின் சிந்தனை (thinking) மற்றும் தர்க்க அறிவினை வளர்த்துகிறது. சுய மற்றும் சமூக ஒழுக்கம் : குழந்தைகள் தாங்கள் தேர்ந்தெடுத்த வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவதால் குறும்புத்தனங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறைகள் அறிவுப்பூர்வமான வேலைகளை தவிர்ப்பது : அறிவு சார்ந்த வேலைகளை விட கைவேலைகள் செய்வது செயல்முறைத் திட்டத்தில் அதிகம். இதனை திறனாய்வாளர்கள், குழந்தைகள் மாதிரிகளை உருவாக்குவது போன்ற வேலைகளில் அதிகமான ஈடுபடுத்தப்படுகின்றனர் என வாதிடுகின்றனர். குறிப்பிட்ட நோக்கம் இல்லாதது மற்றும் கற்பித்தல் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருத்தல் : ஒரு செயல்முறைத் திட்டத்திலேயே அனைத்துப் பாடங்களையும் கொண்டுவர முடியாது. இம்முறை மூலம் பல தலைப்புகள் கற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. கால அட்டவணையை பாதிக்கக் கூடியது: செயல்முறைத் திட்ட முறைகளில் ஒரு நிலையான மாற்றமில்லாத கால அட்டவணையை பின்பற்றுவது இயலாத காரியம். மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் முறையை புறக்கணிக்கிறது: இம்முறை பயிற்சி அளிக்கும் முறையை புறக்கணிக்கிறது. பல பாடங்களில் திறனை வளர்ப்பதில் உதவுவதில்லை. மாணவர்களுக்கு கணிதம் படித்தல், சொற்களை எழுத்துக் கூட்டிச் சொல்லுதல், வரைதல் போன்றவற்றில் தகுந்த அளவு பயிற்சி இம்முறையில் கிடைப்பதில்லை. தகுந்த பாடப் புத்தகங்கள் வடிவமைப்பதில் சிக்கல் : செயல்முறைத் திட்டத்திற்கு ஏற்ற பாடப்புத்தகங்களை உருவாக்குவது எளிதான காரியம் இல்லை. அதுமட்டுமல்லாமல் செயல்முறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள் அதிக செலவு கொண்டது. சாதாரண பள்ளிகளுக்கு இம்முறை பொருத்தமானதில்லை. பொறுப்பை தட்டிக்கழிப்பவருக்கும், கூச்ச சுபாவம் உடையோருக்கும் இது ஏற்றதல்ல. சில மாணவர்கள், பொறுப்பை ஏற்று நடத்தாதவர்கள் பின்னால் இருந்து கொண்டு மிகக் குறைந்த அளவே வேலை செய்வர். சிறு குழந்தைகளிடம் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துகிறது: குழந்தைகள் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. திறமையுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை. இம்முறை வெற்றிகரமாக நடக்க, அதிக திறனுள்ள, அறிவுத்திறனுள்ள ஆசிரியர்கள தேவைப்படுகின்றனர். இம்முறை ஆசிரியர்களுக்கு அதிக சுமையையும் பொறுப்பையும் ஏற்படுத்துகிறது. செயல்முறைத் திட்டம் மற்றும் சாதாரண வகுப்பறையில் ஆசிரியர்களின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பு என்னவெனில் மாணவர்கள் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க தன்னிச்சையான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் ஆர்வம், விருப்பம், திறமை மற்றும் தேவைகளை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். பல்வேறு காட்சிகளின் படங்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்படலாம். சுற்றுப்புற நிலைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படலாம். செயல்முறைத் திட்டத்திற்கான கற்கும் இடம் மற்றும் வேலை ஆகியவை விழாக்களிலிருந்து எடுக்கப்படலாம். ஆசிரியர் தகுதியுடைய சூழலிலிருந்து அனைத்து வளங்களையும் வெளிக் கொணர வேண்டும். சாதாரண வகுப்பறை கற்பித்தலில் உள்ளதை விட செயல்முறைத் திட்ட முறைகள் ஆசிரியர் மாணவர்களிடையே மிக நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துகிறது. தாழ்வு மனப்பான்மையுள்ள மாணவர்கள் தங்களுடைய சிறப்புத் தன்மையை வெளிப்படுத்த ஆசிரியர் தூண்டுகோலாக இருக்க வேண்டும். மாணவர்கள் தனக்குத்தானே உதவி செய்ய ஆசிரியர்கள் உதவ வேண்டும். செயல்முறைத் திட்டம் ஜனநாயக முறைப்படி நடக்குமாறு ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அதிக அளவும், ஆழ்ந்தும் படிக்கவேண்டும். ஆசிரியர்களிடம் தேவையான அளவு பொறுமை, திறன், அறிவு, யுக்தி மற்றும் நேர்மை இருக்க வேண்டும். ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை