அறிமுகம்

தனிநபரைப் பற்றி (Case Study) அறிதல் என்பது, ஒரு அறிவியலாளர் அல்லது ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு தனி நபரின் நடத்தை மனவெழுச்சிகள், நம்பிக்கை மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றி மிக ஆழமாக ஆராய்தல் ஆகும். இம்மாதிரி ஆய்வுகள் நடைமுறைப்பிரச்சனைகளை கண்டறிந்து, சாதாரண நடத்தையிலிருந்து மாறுபடக் கூடியவர்களுக்குத் தேவையான சிகிச்சையையும், ஆலோசனைகளையும் வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முறையில் முக்கியமாக தனிநபரின் வரலாற்றை உள்ளடக்கியது. தனிநபரை பற்றிய வரலாற்றில் குழந்தையின் பழைய மற்றும் புதிய அனுபவங்களால் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்புகள் பற்றி கண்டறிதல் ஆகும். ஒரு தனிப்பட்ட குழந்தையின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் அனைத்துக் குறிப்புகளும் அடங்கிய பதிவேடு குழந்தையின் பழைய வரலாற்றை அறிய பெரிதும் உதவுகிறது.

இந்தக் கூட்டுக் குறிப்புகள் அடங்கிய பதிவேடு குழந்தையைப் பற்றி சிறப்பாக அறிந்து கொள்ளவும், உளவியலாளர் குழந்தையை கேள்விகள் கேட்டு சிகிச்சை செய்யவும் உதவுகிறது. தனிநபரைப் பற்றி அறிதல் (case study) என்பது நடத்தையில் மாறுபாடு உள்ளவர்கள் (deviants) பற்றி அறிந்து கொள்ளவும் உதவுவதால், இதை ஒரு மருத்துவ முறை என்றே அழைக்கலாம்.

தகவல் சேகரிப்பதற்கான வினா தொகுப்பு முறை

வினாத்தொகுப்புமுறை என்பது ஆராய்ச்சிக்கான ஒரு பாடத்தினைப்பற்றிய வினாவரிசை ஆகும். இவ்வினாத் தொகுப்பு பெற்றோர், ஆசிரியர்கள், மற்றவர்கள் அல்லது தன்னைப் பற்றியே அறிந்து கொள்ள ஆர்வமுள்ள குழந்தைக்கே கொடுக்கப்படலாம். வினாக்கள், அந்தந்த விஷயத்தில் தொடர்புடைய நபர்களால் நிரப்பப்பட வேண்டும். தகவல் சேகரிப்பதற்கான வினாத் தொகுப்பு முறை இரண்டு வகைகளில் உள்ளன. ஒன்று வரையறுக்கப்படாத முடிவு கொண்டவை (Open-ended) மற்றொன்று தொடராமல் முடிவு கொண்டவை (close-ended). வரையறுக்கப்படாத முடிவு கொண்ட வினாத்தொகுப்பு முறையில் விடையளிப்பவர் தன்னுடைய கருத்துக்களை அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே எழுதலாம். தொடராமல் முடிவு கொண்ட விடையளிப்பவர் எளிதாக அதில் குறியிட்டால் போதுமானது. இம்முறை குழந்தை வளர்ப்பு முறையை பற்றி அறிவதில் முக்கியமான முறையாகும். நல்ல வினாத்தொகுப்பு முறையில், வினாக்கள் தெளிவாகவும், சரியான முறையில் வார்த்தைகள் அமைக்கப்பட்டும் இருக்கும். வினாக்கள் எளிதாக பதிலளிக்கக் கூடியதாகவும், மிக நீளமாகவும் இருக்காது.

கூர்ந்து நோக்குதல்

அனைத்து அறிவியலும் கூர்ந்து நோக்குதலை அடிப்படையாகக் கொண்டது. குழந்தை வளர்ப்பு முறையிலும் உண்மைகளை சேகரிக்க இம்முறை ஒரு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தைகளை கூர்ந்து நோக்கினால் அவர்களைப் பற்றிய தெளிவான பதிவுகளை அறிந்து கொள்ளலாம். முந்தைய காலங்களில், விஞ்ஞான கருவிகள் கிடைக்காததால் கூர்ந்து நோக்குபவர்கள் தற்செயலான திட்டமிடப்படாத கூர்ந்து நோக்குதலை செய்து அதன் பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்துள்ளனர். இன்றைய கூர்ந்து நோக்குதல் செயற்கையான கருவிகளான வீடியோ காமிரா (video camera) மற்றும் டேப் ரிக்கார்டர் (tape recorder) ஆகியவற்றைக் கொண்டு மிகத் தெளிவாக செய்திகளை பதிவுசெய்து கொள்ள முடியும். கூர்ந்து நோக்குதல் என்பது ஒரு நடைமுறைக்கு உதவக்கூடிய ஆராய்ச்சி ஆகும். இது மக்களின் வளர்ச்சி, தொடர்பு மற்றும் நடத்தைப் பற்றிய செய்திகளை சேகரிக்க ஒரு மதிப்புமிக்க கருவியாகும். குழந்தை பற்றிய ஆராய்ச்சிகளில், சரியான கூர்ந்து நோக்குதல் திறன்கள் செய்திகளை பதிவு செய்ய உதவுகிறது.

கூர்ந்து நோக்கும் முறைகள்

இயற்கையான சூழலில் கூர்ந்து நோக்குதல், பங்கேற்பவர் மற்றும் பங்கேற்பவர் இல்லாத கூர்ந்து நோக்குதல் இயற்கையான சூழலில் கூர்ந்து நோக்குதல் (Naturalistic observation): இயற்கையான சூழலில் தனிநபரின் நடத்தையை கூர்ந்து நோக்குவதே இம்முறையாகும். நாள் முழுவதும் ஒரு குழந்தையின் செயல்களை கூர்ந்து நோக்குவது, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படக்கூடிய தொடர் செயல்களை கூர்ந்து நோக்குவது போன்றவை இயற்கையான சூழலில் கூர்ந்து நோக்கும் முறைக்கு சில உதாரணங்களாகும். கூர்ந்து நோக்குபவர் இயற்கையான சூழலின் இடையில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையான சூழலில் கூர்ந்து நோக்குதல், முறைப்படி அமைக்கப்படாமல் அல்லது ஒரு குறிப்பிட்ட கட்டமைவுகள் இல்லாமல் நடக்கக் கூடியது. ஒரு குழந்தையின் செயல்களை எந்த ஒரு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளும் இல்லாமல் முறைப்படி இல்லாமல் அப்படியே பதிவுசெய்யப்படுகிறது. இயற்கையான சூழலில் கூர்ந்து நோக்குதல் மனிதனின் குணநலன்களைப் பற்றிய உண்மைகளை அறிய உதவுகிறது.

பங்கேற்பவர் மற்றும் பங்கேற்பவர் இல்லாத கூர்ந்து நோக்குதல்

குழந்தையின் நடத்தையை கூர்ந்து நோக்கி பதிவு செய்யும் போது, கூர்ந்து நோக்குபவர் குழந்தைகளின் செயல்பாடுகளில் கலந்து கொண்டு, அதே சமயம் குழந்தையின் நடத்தையையும் பதிவு செய்வார். இவ்வகை கூர்ந்து நோக்குதல் பங்கேற்பவர் பங்கு பெறும் கூர்ந்து நோக்குதல் (participantobservation) என்று பெயர். சில சமயங்களில், கூர்ந்து நோக்குபவர் செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் குழந்தைகளை கவனித்து, அவர்களுடைய செயல்களை மட்டும் பதிவு செய்வார். இம்முறை பங்கேற்பவர் இல்லாத கூர்ந்து நோக்குதல் (non-participant observation) என அழைக்கப்படுகிறது. எந்தவகையான கூர்ந்து நோக்குதலாக இருந்தாலும் சரியான பொருள் விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். சமூக தொடர்புகளை அறிதல் (sociometry) சோஷியோக்ராம் (Sociogram) என்பது ஒரு குழுவில் நபர்களுக்கு இடையே உள்ள தொடர்பினைக் கூறுவது. இதனுடைய நோக்கம் என்னவெனில் குழுவின் கட்டமைப்பை அறிவதாகும். அதாவது நட்பு முறைகள், கிளைக் குழுவின் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படை வலைப்பின்னல் பற்றி அறிவதாகும். ஒரு குழுவில் குழந்தைக்கு உள்ள தொடர்பு, ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு போன்ற செய்திகளை சோஷியோக்ராம் மூலம் பெறலாம். சோஷியோக்ராம் ஆசிரியருக்கு ஆற்றல் மிக்க கருவியாகவும், ஒரு குழுவின் நடத்தையை பற்றி ஆசிரியர் நன்கு புரிந்து கொள்ளவும், அதன் மூலம் குழுவை நிர்வகிக்கவும், பாடத்திட்டங்களைத் தயாரிக்கவும் உதவுகிறது.

தளப்பயணம்

தளப்பயணத்தைத் திட்டமிடுவது என்பது குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருகிறது. முன் பள்ளிக்கான பாடத்திட்டங்களை மற்றும் செயல்பாடுகளை உண்மையான நடைமுறை வாழ்க்கையில் பார்க்கக் கூடிய வாய்ப்பினை அளிக்கிறது.

உற்று நோக்குதல் மூலம் மாணவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ற முதல் அனுபவங்களைப் பெறுகிறார்கள். மாணவர்களை கற்றலுக்கு ஊக்குவிக்கிறது. பொருட்களை ஆராய்வதற்கும், புதிய உத்திகளைப் பெறவும், நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

தளப்பயணத்தைத் திட்டமிடுதல்

குழந்தைகளின் கற்றல் அனுபவங்களை வகுப்பறைக்கு வெளியே கொண்டு செல்வதன் மூலம் உண்மையான அனுபவங்களைப் பெற்று அவர்களைச் சுற்றியுள்ள உலகைப்புரிந்து கொள்ள வழி வகுக்கும். முன்பள்ளியின் தளப் பயணம் வெற்றிகரமாக அமைய அதிகக் கவனத்துடன் திட்டமிடப்பட வேண்டும். இல்லையெனில் வேடிக்கையாக வெளியில் செல்லுதல் அபாயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாகிவிடும்.

தளப்பயணத்திற்குப் போக வேண்டிய இடத்தினை முடிவு செய்தல் குழந்தைகளுக்குப் பிடித்தமான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கே, குழந்தைகள் பார்க்கும் பொருட்கள் சிலவற்றைத் தொட்டுணரவும், ஆராய்ந்து பார்க்கவும் வசதி இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான பொருட்காட்சிநிலையம் (Children'smuseums), மிருகக் காட்சிசாலை (Zoo), பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகம் (Aquarium) போன்றவை சுறுசுறுப்பான முன் பள்ளிக் குழந்தைகளைக் குழுவாகக் கூட்டிச் செல்ல கற்பனையைத் தூண்டும் சரியான இடங்களாகும். சரியான நேரத்திற்கு முன்னதாகவே முடிவு செய்த இடங்களுக்கு செல்லுவதால் ஒய்வு அறை, ஒய்வு இடங்கள், உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

தளப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு ஒரு முறை சென்று ஆய்வு செய்வதால் (previsit) வகுப்பறையில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான சிறப்புத் தேவைகளைத் செய்து தர ஏற்பாடு செய்யலாம். அநேக இடங்கள் பெரிய குழுக்களாக வரக் கூடிய குழந்தைகள் பார்வையிட ஏதுவாக இருக்க வேண்டும். எனவே முன்பள்ளிக் குழந்தைகள் போகும் இடத்திற்கு செல்ல வேண்டிய தேதி, இடம் மற்றும் சென்று அடையக் கூடிய நேரம் ஆகியவற்றைத் தெரிவிப்பது நற்பண்பாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.