தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இயக்ககம் அறிமுகப்படுத்தும் புதிய இளநிலைப் பட்டப்படிப்பு – பண்ணைத் தொழில்நுட்பம்

உழவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு நிலத்தினைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரை, தானியங்களைச் சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரையிலான அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பருவ முறையில்(செமஸ்டர்) மூன்று ஆண்டுகளுக்கு ஆறு பருவங்களில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன. அனுபவம் வாய்ந்த வேளாண் அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்/ பேராசிரியர்களால் தமிழ் வழிக்கல்வியில் உழவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து பாடங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பட்டப்படிப்பின் முக்கிய அம்சமாக அனைத்து தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப் பயிற்சி வழியாக எளிய முறையில் தமிழில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழகமெங்கும் உள்ள 36 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 14 வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக, பாடத்திட்டங்கள் வழங்கப்படும். எனவே, தங்களுக்கு அருகாமையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மையங்கள் மூலமாக உழவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படித்த 30 வயது நிரம்பிய அனைவரும் இத்தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் இந்த ஆண்டு இப்பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பின் மூலம் கல்வி கற்கும் உழவர் சுயதொழில் முனைவோராக மாற வாய்ப்புண்டு. மேலும் சொந்த முயற்சியினால் வேளாண்மை, அதனைச் சார்ந்த துணைத்தொழில்களை அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ள வழிகாட்டுதலாக அமையும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,