கல்வி நிறுவனத்தை தேர்வு செய்தலில் கவனமாக பரிசீலித்து முடிவெடுப்பதின் அவசியம் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்தலில் கவனிக்க வேண்டியவை

ஒரு மேலாண்மை கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யும் முன்னதாக, நாம் சில விஷயங்களை கவனமாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

வழங்கப்படும் படிப்பகளின் விபரங்களை கவனிக்க வேண்டும்.

உங்களின் எதிர்பார்ப்புக்கு அவை ஒத்துவருமா என்பதை யோசிக்க வேண்டும்.

பேராசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் அங்கு படித்தவர்கள் பெற்ற வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்களை சரிபார்க்க வேண்டும்.

தொழில் மற்றும் கல்வி தொடர்பான வலைதளங்களில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் பெற்றுள்ள தரநிலை குறித்து ஆராய வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் படிக்கும் இந்நாள் மாணவர்களில் யாரையாவது தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பிட்ட வணிகப் பள்ளியில் சேரும் முன்பாக, அங்கு சென்று சுற்றிப்பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாட வேண்டும்.

பணி வாய்ப்பு விபரங்கள் குறித்து அலசுதல்

ஒரு கல்வி நிறுவனத்தில் சேரும் முன்னதாக, அங்கே, அதற்கு முந்தைய ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள் பெற்ற வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். பெறப்பட்ட வேலை வாய்ப்பு விபரங்கள், CTC figures மூலமாக, எளிதாக மதிப்பிடப்படுகின்றன.

வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்களின் தரம் மற்றும் தன்மை, அவை வழங்கும் பணிகளின் நிலைகள் குறித்து விரிவாக ஆராய வேண்டும். மேலும், முன்னாள் மாணவர்கள் மூலமாகவும் அதுதொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

முன்னாள் மாணவர்களை, நேருக்கு நேர் சந்தித்து உரையாடுவது சிறந்தது. மேலும், கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக செல்லும்போது, அங்கே தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்தித்து, அவர்களிடம் உண்மை நிலவரங்களை கேட்டறிவது சிறப்பான செயல்.

வெளிநாட்டு வணிகப் பள்ளிகளில் இந்திய வளாகங்கள்

இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு வணிகப் பள்ளிகளின் வளாகங்களில் சேர்ந்து படிப்பது எந்தளவிற்கு நன்மை தரும் என்ற சந்தேகம் பல இந்திய மாணவர்களுக்கு உள்ளது. எனவே அதுதொடர்பாக தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, வெளிநாட்டு வணிகப் பள்ளிகளின் இந்திய வளாகங்கள் வழங்கும் பட்டங்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வணிகப் பள்ளிகளின் பட்டங்களே. எனவே அவை, இந்தியாவில் வழங்கப்படும் படிப்புகளுக்கு சமமான தரத்தில் உள்ளனவா என்று இந்திய பல்கலைக்கழகங்களின் அமைப்பினால் சோதிக்கப்படும்.

இந்தியாவில் நுழையும் வெளிநாட்டுப் பல்கலைகளுக்கென்று, பல கடுமையான விதிமுறைகளை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த 400 பல்கலைகளுள் ஒன்றாக மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிதி ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

சர்வதேச அளவிலான மாணவர்களுடன் தங்கிப் படிப்பது மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களுடன் உரையாடுவது, சர்வதேச தரமுள்ள கல்வி நிறுவன சூழலில் தங்கியிருந்து கற்பது உள்ளிட்ட வாய்ப்புகள், உள்நாட்டில் அமைந்த வெளிநாட்டு வணிகப் பள்ளிகளின் வளாகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்காது.

எனவே, தேவையான வசதிகளும், வாய்ப்புகளும் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், முடிந்தளவு நேரடியாக வெளிநாட்டிற்கு சென்று படிப்பதே சிறப்பான அனுபவத்தை தரும். உள்நாட்டில் அமைந்த வளாகமானது, அந்த நிறைவைத் தராது.

ஆதாரம் : மனித நேய அறக்கட்டளை