அறிமுகம் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் 48 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ (B.I) பதிப்பகத்தின் திரு. மாத்யூ அவர்களின் முயற்சியால் சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இவர்கள் 24.08.1976-ல் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்தக் கூட்டமைப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவை முதலில் ஒரு சில உறுப்பினர்களுடன் அண்ணா சாலையிலுள்ள மதுரஸா யஏ – ஆலம் மேல்நிலைப் பள்ளியில் சிறியதாக ஆரம்பித்தது. அதற்கடுத்த 28 ஆண்டுகள் அதே வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு இருந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. சென்னை புத்தகக் காட்சி 2025 48 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 27.12.2024 முதல் 12.01.2025 வரை நடைபெற உள்ளது. புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: www.bapasi.com