இல்லறவியல்

இனியவைகூறல்

91 இன்சொல்-இன்சொல்லாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.

விளக்கம்

('ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்-அன்புடைமை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.) ---

92 அகன் அமர்ந்து ஈதலின் நன்று-நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்-கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.

விளக்கம்

(இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின், அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார். ---

93 முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி-கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின் நண்ணிய வழி, மனத்துடன் இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.

விளக்கம்

('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல் நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது. ---

94 யார்மட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு-எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்-துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.

விளக்கம்

(நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' எனப்பட்டுது. 'யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பே ஆம். ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.) ---

95 ஒருவர்க்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல்-ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல்; பிற அல்ல-அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா.

விளக்கம்

(இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், 'பிற' எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)

96 நல்லவை நாடி இனி சொலின்-பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும்-அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.

விளக்கம்

(தேய்தல்: தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்று மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.) ---

97 நயன் ஈன்று நன்றி பயக்கும் ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்; பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்-பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல் நீதி. உலகத்தோடு பொருந்துதல்.

விளக்கம்

('பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல்-ஒரு சொல் நீர்மைத்து.) ---

98 சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும்-ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.

விளக்கம்

(மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.) ---

99 இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்-பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல்-அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?

விளக்கம்

('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.) ---

100 இனிய உளவாக இன்னாத கூறல்-அறம் பயக்கும்-இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று-இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.

விளக்கம்

('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.) --

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்