துறவறவியல்

இன்னாசெய்யாமை

311. சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத் தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாரது துணிவு.

விளக்கம்

(உம்மை பெறாமை மேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு' என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் 'சிறப்பு ஈனும் செல்வம்' என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றாமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.) ---

312. கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும், மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.

விளக்கம்

(இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.) ---

313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும்.

விளக்கம்

(அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.) ---

314 இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறத்தலாவது; அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்த அவ்விரண்டனையும் மறத்தல்.

விளக்கம்

(மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பா ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.) ---

315 அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ; பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தன போலக் குறிக்கொண்டு காவா இடத்து ?

விளக்கம்

(குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறினைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், 'அது செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனான் செய்தல் விலக்கப்பட்டது.) ---

316. இன்னா எனத் தான் உணர்ந்தவை-இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை; பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.

விளக்கம்

(இன்பத் துன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.) --

317. மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகின்ற இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம்.

விளக்கம்

(ஈண்டு, மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும், எளியார்க்கும் ஆகாமையின், 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.) ---

318. தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்; மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்?

விளக்கம்

(இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப் பாவம் கழுவப்படாமையின் 'இன்னாதன யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும், அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பதுபோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.) ---

319. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின; தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.

விளக்கம்

('முற்பகல், 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும்; அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின், அச்செயல் தானே தமக்கு இன்னாதன வாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)

320 நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இன்னா தன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.

விளக்கம்

("உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் அதுவே,' '(சீவக. முத்தி. 164) ஆகலின், "நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்