இல்லறவியல்

ஈகை

221. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை-ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து-அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து.

விளக்கம்

(ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.) ---

222. கொளல் நல் ஆறு எனினும் தீது-ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று-ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும், ஈதலே நன்று.

விளக்கம்

('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.) ---

223.. இலன் என்னும் எவ்வம் உரையாமை-யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும்; ஈதல்-அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்; உளகுலன் உடையான்கண்ணே-இவை இரண்டு உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.

விளக்கம்

(மேல் 'தீது' என்றது ஒழிதற்கும் 'நன்று' என்றது செய்தற்கும் உரியவனை உயர்த்தியவாறு. இனி 'இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்' என்பதற்கு, 'அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல்' எனவும், 'அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், 'யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன்' எனக் 'கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்' எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.) ---

224.இரக்கப்படுதல் இன்னாது-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று; இரந்தவர் இன்முகம் காணும் அளவு-ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;

விளக்கம்

(எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப்படுதல்-'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது, 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி. 145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே, எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.) ---

225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்-தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்- அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்.

விளக்கம்

(தாமும் பசித்துப் பிறரையும் அது 'தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் அற்றல் நன்று என்பதாம்.) ---

226. அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க; பொருள்பெற்றான் ஒருவன்வைப்புழி அஃது-பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான்.

விளக்கம்

(எல்லா நன்மைகளும் அழிய வருதலின், 'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.) ---

227. பாத்து ஊண் மரீஇயவனை-எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.

விளக்கம்

(இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.) ---

228. தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்-தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-வறியார்க்குவேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!

விளக்கம்

('உவக்கும்' என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம்; அஃது 'இன்பம்' என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

229. நிரப்பிய தாமே தமியர் உணல்-பொருட்குறை நிரப்ப வேண்டிய வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல்; இரத்தலின் இன்னாது மன்ற-ஒருவார்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக.

விளக்கம்

(பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக்குறித்து அத்துணை ஈட்டுதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை. தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.) --

230. சாதலின் இன்னாதது இல்லை-ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை; அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது-அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.

விளக்கம்

(பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்