இல்லறவியல்

ஒழுக்கமுடைமை

131 ஒழுக்கம் விழுப்பம் தரலான்-ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்-அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

விளக்கம்

(உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.) ---

132 ஒழுக்கம் ஓம்பிப் பிரிந்து காக்க-ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்த ஓம்பித் தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, 'இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாது?' என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.

விளக்கம்

('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்து சிறப்புக் கூறப்பட்டது.) ---

133 ஒழுக்கம்-உடைமை குடிமை-எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்-அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

விளக்கம்

(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்ததராவர் ஆகலின் 'குடிமையாம்' என்றும்; உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் 'இழிந்த பிறப்பாய் விடும்' என்றும் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ் விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.) ---

134 ஓத்து மறப்பினும் கொளலாகும் கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்-அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.

விளக்கம்

(மறந்தவழி. இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.) ---

135 அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல; ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.

விளக்கம்

(உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் (குறள்.166) நல்கூர்தலின். உயர்வு: உயர் குலமாதல்.) ---

136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்-செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து-அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.

விளக்கம்

(ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.) --

137 ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்-எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர்-அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.

விளக்கம்

(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம்பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி எய்துவர்' என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.) ---

138 நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்-ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்-தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.

விளக்கம்

('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம். ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.) ---

139 வழுக்கியும் தீய வாயால் சொல்ல-மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.

விளக்கம்

(தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முத லியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொல்' சாதியொருமை. 'சொல்லல்' எனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.) ---

140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்-உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்; பல கற்றும் அறிவிலாதார்-பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.

விளக்கம்

(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும் செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றான் தொகுத்துக் கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்