பாயிரவியல்

கடவுள் வாழ்த்து

1) எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

விளக்கம்
(இது தலைமைபற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து எல்லாம்' என்றார். 'ஆதிபகவன்' என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள்மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின்மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம்-தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

2. கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?

விளக்கம்
('எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.) ---

3. மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய் வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்

விளக்கம்
(அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும், ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல். சொல். வினை. 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றவாரும் உளர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.)---

4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.

விளக்கம்
(பிறவித் துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.) ---

5)இருள் சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.

விளக்கம்

(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே 'பொருள் சேர் புகழ்' எனப்பட்டது. புரிதல்-எப்பொழுதும் சொல்லுதல்.) --

6 பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்; நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

விளக்கம்
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று.) ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது) ---

7. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.

விளக்கம்
("உற்றபல தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.) ---

8. அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கு அல்லாது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது

விளக்கம்
(அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் 'பிற' எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையான் ஆகலின், 'அற ஆழி அந்தணன்' என்றார். 'அற ஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப் புணையைச் சேராதார் கரை காணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.) ---

9 கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத்தலை- எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்

விளக்கம்
எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலான உடையன எனவும் உரைப்பாரும் உளர். 'காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல' எனத் தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) ---

10. இறைவன் அடி (சேர்ந்தார்) பிரவிப் பெருங்கடல் நீந்துவர் - இரைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெருங்கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

விளக்கம்
(காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் எனப்து சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவைன் அடியையே நினைப்பார்க்கு பிறவி அறுதலும், அவ்வாறின்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரன்டும் இதனான் நியமிக்கப்பட்டன. ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்