இல்லறவியல்

நடுவு நிலைமை

111 தகுதி என ஒன்றே நன்று-நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல், நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்,

விளக்கம்

(தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு 'தோறு'ம் என்பதன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவு நிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.) ---

112 செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.

விளக்கம்

(விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்துவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.) ---

113 நன்றே தரினும்-தீங்கு அன்றி நன்மையே பயந்த தாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.

விளக்கம்

(நன்மை பயவாமையின் 'நன்றே தரினும்' என்றார். 'இகத்தலான்' என்பது 'இகந்து' எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச் செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.) ---

.114 தக்கார் தகவிலர் என்பது-இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.

விளக்கம்

(தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.) ---

115 கேடும் பெருக்கமும் இல் அல்ல-தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி-அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.

விளக்கம்

(அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று' என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், 'சான்றோர்க்கு அணி' என்றார்.) ---

116 தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக-அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.

விளக்கம்

(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.) ---

117 நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.

விளக்கம்

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர். ('கெடு' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம், கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.) ---

118 சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்-முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி-இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

விளக்கம்

(உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒரு பால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கவாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.) ---

119 செப்பம் சொற்கோட்டம் இல்லது-நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறன்-அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.

விளக்கம்

(சொல்: ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது.) ---

120 பிறவும் தம்போல் பேணிச் செய்யின் - பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய வணிகம் ஆம்.

விளக்கம்

(பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்