துறவறவியல்

நிலையாமை

331. நில்லாதவற்றை நிலையின் என்று உணரும் புல்லறிவு ஆண்மை - நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடைய என்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை - துறந்தார்க்கு இழிபு.

விளக்கம்

(தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி, புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும்,அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.) ---

332. பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற் போலும்; போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும்.

விளக்கம்

(பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. 'போக்கும்' என்ற எச்சஉம்மையான்வருதல் பெற்றாம்; அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித்தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல்திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.) ---

333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடையப்துச் செல்வம்; அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க.

விளக்கம்

('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழ் உள்வழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், 'அது பெற்றால்' என்றும், அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட்பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின், அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.) ---

334. நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறை போலத் தன்னைக் காட்சி ஈர்ந்து செல்கின்ற வாளினது னாயது உயிர்; உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின்.

விளக்கம்

(காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், 'நான் என ஒன்றுபோல் என்றும், அது தன்னை வாள் என்று உணர மாட்டாதார் தமக்குப்பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும், இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின், 'உணர்வார்ப் பெறின்' என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவே யாகலின், 'வாள்' என்பது ஆகுபெயர். இனி இதனை 'நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம்' என்று உரைப்பாரும் உளர்: 'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.) ---

335. நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடாவண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும்.

விளக்கம்

(மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும், 'வாராமுன்' என்றும், அதுதான் இன்ன பொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல், மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.) ---

336. ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து - 'ஒருவன் நெருநல் உளனாயினான், அவனே இன்று இல்லையாயினான்' என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து; இவ்வுலகு - இவ்வுலகம்.

விளக்கம்

(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப் பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.) ---

337. ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலை தெளியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார்.

விளக்கம்

(இழிவு சிறப்புஉம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று. பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனான் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனி, 'கருதுப' என்பதனை அஃறினைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.) ---

338. குடும்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து, உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.

விளக்கம்

('தனித்து ஒழிய' என்றதனான், முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய் நிற்றல்: அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள் உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும் உளவேனும்,புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு' என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடும்பை' என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல் உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.) ---

339. சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் -அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு 'ஒக்கும்.

விளக்கம்

(உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.) ---

340. உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு; புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!

விளக்கம்

(அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினும் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின், பிறர் இல்களுல் துச்சிலிராது என்பதாம்; ஆகவே, உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவை ஏது பாட்டானும், முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும, அவை ஓரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டு கொள்க.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்