துறவறவியல்

வாய்மை

291. வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின்; தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல்.

விளக்கம்

('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அதுதானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம்; பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.) ---

292. புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலஆம்.

விளக்கம்

(குற்றம் தீர்ந்த நன்மை: அறம்; அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல் நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம்; பயப்பின், மெய்ம்மையாம் என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை' எனவும், 'நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.) ---

293. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.

விளக்கம்

(நெஞ்சு கரியாதல் "கண்டவர இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித். நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.) ---

294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். 'உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம்.

விளக்கம்

(பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல். அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.) ---

295. மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.

விளக்கம்

(மனத்தொடு பொருந்துதல்-மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.) ---

296. பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும் தானே கொடுக்கும்.

விளக்கம்

('புகழ்' ஈண்டு ஆகுபெயர். இல்லறத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேண்டுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார். 'எய்யாமை எல்லா அறமும் தரும்' என்றார்.) ---

297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் பொய்யாமையையே பொய்யாமையையே செய்ய வல்லனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று.

விளக்கம்

(அடுக்கு இரண்டனுள்; முதலது இடைவிடாமை மேற்று; ஏனையது துணிவின்மேற்று. 'பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று,' என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார். இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று,' எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிறர் அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப் பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) ---

298. புறம் தூய்மை நீரான் அமையும் - ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும் - அது போல, மனம் தூய்தாந்தான்மை வாய்மையான் உண்டாம்.

விளக்கம்

(காணப்படுவது உள்ளதாகலின், 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்; மனம் தூய்தாதல் மெய்யுணர்தல், புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும் என்பதூஉம் பெற்றாம்.) ---

299. எல்லா விளக்கும் விளக்குஅல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா; சான்றோர்க்கு விளக்குப் பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.

விளக்கம்

(உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம்

அல்ல; அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே,' என்று உரைப்பாரும் உளர்.) ---

300. யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்; எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.

விளக்கம்

(மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன; தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லாராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற்பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்