ஒழிபியல்

இரவச்சம்

1061. கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது 'இவர் வரப்பெற்றோம்' என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று.

விளக்கம்

(நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின். உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.) ---

1062. உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.

விளக்கம்

(மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.) ---

1063. இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.

விளக்கம்

(நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமைத் தீர்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)

1064. இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற்சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளா தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து.

விளக்கம்

(அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.) ---

1065. தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும்; உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை.

விளக்கம்

(தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)

1066. ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல் வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு இளிவந்தது இல் - அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிந்தது பிறிது இல்லை.

விளக்கம்

(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும் இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.) ---

1067. இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - 'யாது சொல்லி?' எனின், நுமக்கு இரக்க வேண்டுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி,

விளக்கம்

(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.) ---

1068. இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி -'இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும்,' என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம்.

விளக்கம்

(முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதற்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.) ---

1069. இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார்முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும்.

விளக்கம்

(''இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.'' (நாலடி. 305) என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்' என்று உரைத்தார்.)

1070. சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர் தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்?

விளக்கம்

(உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்?' என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். ''அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்'' (நாலடி. 308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்ல வற்றாய சொல், சொல்வாரைக்கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம்; இஃகு என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர் கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம்; ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்து நிற்கும்? இரண்டானும் போமேயன்றோ?' என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்