ஒழிபியல்

இரவு

1051. இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான்.

விளக்கம்

('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர் கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும், ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.) ---

1052. ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅ வரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின்.

விளக்கம்

(இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதி யொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.) ---

1053. கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.

விளக்கம்

(''சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு'' [குறள். 963] என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய் அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.) ---

1054. கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது சுரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும்.

விளக்கம்

(உம்மை - ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெடவாராமையின் 'ஈதலே போலும்' என்றார். ஏகாரம் - ஈற்றசை.) ---

1055. கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம் பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே; பிறிதொன்றான் அன்று.

விளக்கம்

(அவர் இல்லையாயின். மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.) ---

1056. கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம் விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும்.

விளக்கம்

(கரத்தல், ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி, 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.) ---

1057. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து.

விளக்கம்

(இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், ''உள்ளுள் உவப்பது உடைத்து'' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.) ---

1058. இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும்.

விளக்கம்

(ஐகாரம், அசைநிலை ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், ''ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர்,'' என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---

1059. இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்து கோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார்மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை.

விளக்கம்

(தோற்றம் - ஆகுபெயர். 'மேவுவார்' என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின், அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.) ---

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி 'இவன் எனக்கு ஈகின்றிலன்' என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்.

விளக்கம்

(யாவர்க்கும் தேட வேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்