அங்கவியல்

உட்பகை

881. நிழல் நீரும் இன்னாத இன்னா ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அது போலத் தழுவவேண்டுவனவாய தமரியல் புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம்.

விளக்கம்

(நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.) ---

882. வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக.

விளக்கம்

(பகைவர்: ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.) -

883. உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர்.

விளக்கம்

('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாது என்பதாம்.) ---

884. மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

விளக்கம்

(அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)

885. உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவு முறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

விளக்கம்

(அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும் முதலாயின.) ---

886. ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.

விளக்கம்

(பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---

887. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்.

விளக்கம்

(செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடுவந்தது என்பது போலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைபாரும் உளர்.) ---

888. உட்பகை உற்ற குடி-முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும்.

விளக்கம்

('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ்செய்வது போன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலி தேய்ந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---

889. உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம்.

விளக்கம்

(எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.) ---

890. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.

விளக்கம்

('குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால் அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்