ஒழிபியல்

பெருமை

971. ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இனி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.

விளக்கம்

(ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. "ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்வான்" [நாலடி. செல்வம் நிலையாமை. 9] என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' [குறள். 26] என்றாராயினும், ஈண்டு அவை அளவிறந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு, "உள்ள வெறுக்கை" என்றும், அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளி ஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.) ---

972. எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.

விளக்கம்

(வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய் அளவிறந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.) ---

973. மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்; கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் - அவை செய்து பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார்.

விளக்கம்

(மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமைமாத்திரத்தானும் செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.) ---

974. ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம்.

விளக்கம்

(பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.) ---

975. பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர்.

விளக்கம்

('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை' உடையவர் என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.) ---

976. பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப் பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினையாம் கோடும் என்னும் கரத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.

விளக்கம்

(குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.) ---

977. சிறப்புத் தானும் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண் படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின். இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.

விளக்கம்

(தருக்கினை மிகச் செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)

978. பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை

விளக்கம்

(என்றும்) தன்னை வியந்து அணியும்-மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர்.

விளக்கம்

(பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்படடன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை' (குறள். 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. 'ஆம்' என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக் கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)-

979. பெருமை பெருமிதம இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக் கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்,

விளக்கம்

('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.) ---

980. பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார்.

விளக்கம்

(மறைத்தலும் கூறலும ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகு பெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்