வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகள் வழி தமிழர்களின் பழங்கால நாகரிகங்கள் உலகுக்குத் தெரிய வந்தன. வேளாண்மை, தொழில் திறமை, பழக்க வழக்கங்கள் பற்றிய சிறப்பை இங்குக் கிடைத்த பொருட்களின் மூலம் உணர முடிகிறது. கி.மு.1200-இல் நெல் பயிரிடப்பட்டதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அனுப்புவதற்காக இரும்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட விபரங்களும் இந்தப்புதை பொருள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இம்மாவட்டத்து ஊர்ப் பெயர்கள் அனைத்தும் வரலாற்றுச் செய்திகளைக் கூறுவனவாகவே உள்ளன. பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.

சோழர் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் சூறையிட்டான். பாண்டியர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக காலங்கழித்தனர் 15-நூற்றாண்டு முதல் விஜயநகர, நாயக்கர் ஆட்சி மதுரையில் தொடங்கியது. பாண்டிய அரசு தூண்டாடப்பட்டு தமிழ் நாடே 72 பாளையப்பட்டாக நாயக்கர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்கள் உருமாறி 1910ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 31 ஜமீன்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்டவை : நாங்குனேரி, சொக்கம்பட்டி, சிவகிரி, தலைவன் கோட்டை, நெற்ட்டுசேவல், ஊற்றுமலை, எட்டயபுரம், பாளையபட்டுகளை நிர்வகித்தவர்கள் அரியநாத முதலியாரும், வடமலையப்பன் பிள்ளையும் ஆவர்.

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு

சேரன் மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீலவ பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பெளத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன. மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது. திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன் கோட்டையில் காணலாம். வீர கேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொதுவிவரங்கள்

மழையளவு: 814.8 மி.மீ; புகைவண்டி நிலையங்கள்: 26; காவல் நிலையங்கள்: 80; சாலைநீளம்: 5,432 கி.மீ; பதிவுபெற்ற வாகனங்கள்: 48,773; அஞ்சலகங்கள்: 553; தொலைபேசிகள்: 29,779.

எல்லைகள்

கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும்; மேற்கில் கேரளத்தையும்; வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும்; தெற்கில் கண்ணியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள்

மாநகராட்சி-1;

திருநெல்வேலி.

நகராட்சிகள் :6;

ஊராட்சி ஒன்றியம் :19;

பேரூராட்சிகள் 39;

சட்டசபை தொகுதிகள்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

சேரன் மாதேவி

அம்பா சமுத்திரம்

தென்காசி

ஆலங்குளம்

வாசுதேவநல்லூர்

சங்கரன் கோவில்

இராதாபுரம்

நாங்குநேரி

கடையநல்லூர்.

கல்வி

பள்ளிகள்

தொடக்கப்பள்ளிகள் - நடுநிலை - உயர்நிலை - மேல்நிலை - கல்லூரிகள்

தொழில் கல்வி நிறுவனங்கள்

அரசு மருத்துவக் கல்லூரி

அரசு சித்த மருத்துவக் கல்லூரி

தொழிற்பயிற்சி நிறுவனங்கள்

தொழிற் நுட்பக் கல்லூரிகள்

ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.

மருத்துவம்

மருத்துவ மனைகள்-10;

மருந்தகம் - 3;

தொடக்க மருத்துவ நல நிலையம் 55;

துணை தொ.ம.நலநிலையம்-385.

பெயர்க்காரணம்

நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே 'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.

ஆற்றுவளம்

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.

தாமிரபரணி

பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகியவற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக்கிறது. தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.

சிற்றாறு

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி - திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.

அணைகள்

மணிமுத்தாறு அணை

அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணைகள்

பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம். மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்க நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய்களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஸ்ரீமுகப்பேரி அணை

தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

மலைவளம்

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.

அகத்தியமலை

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.

ஐந்தலை பொதிகை

அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

காட்டு வளம்

காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன. மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகைகளும், ஈச்ச மரங்களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன. நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு. செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள்

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட்டெருதுகள் காணப்படுகின்றன. புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம். தலை சிறுத்த சாம்பல் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள்

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப்படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத்திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன. பருத்தி வாத்து என்ற ஒரு இனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது. உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம்

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள். மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

தருவைகள்

பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.

கனிமங்கள்

சுண்ணாம்புக்கல்

சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.

கார்னர்டு மணல்

உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.

அல்லனைட்

அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

மோனசைட்

இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.

மைக்கா

நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.

கிராபைட்

உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

வேளாண்மை

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகியவையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங்களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.

பணப்பயிர்கள்

1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. 1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன. 1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன. குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

சுற்றுலா தலங்கள்

இம்மாவட்டத்தில் கட்டாயம் காண வேண்டிய இடங்களாக கீழ்கண்ட இடங்களைக் குறிப்பிடலாம் :-

அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி

ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

இ) குற்றாலம்

ஈ) கிருஷ்ணாபுரம்

உ) திருக்குறுங்குடி

ஊ) முண்டந்துறை புலிகள் புகலிடம்

எ) களக்காடு புலிகள் புகலிடம்

ஏ) கூந்தக் குளம் பறவைகள் புகலிடம்

ஐ) அரியகுளம் பறவைகள் புகலிடம்.

பாபநாசம் நீர்வீழ்ச்சி

அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

குற்றாலம்

திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும். குற்றாலத்தைப் பற்றி இலக்கியங்கள் நிரம்பப் பேசுகின்றன. இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது. குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி

தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.

செண்பக அருவி

தேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.

பொங்குமாகடல்

செண்பக அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.

புலி அருவி

குற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.

ஐந்தருவி

சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.

செண்பக அருவிக்கு அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது. ஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

திருக்குறுங்குடி

இது நெல்லையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை சூழ்ந்த மகேந்திர மலை அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையில் இருக்கிறது. பெருமாளுக்கு நம்பிராஜன் என்று பெயர். இத்தென்கலை வைணவக் கோயிலில் சிவபெருமானும் இருக்கிறார். நால்வர், பைரவர், சண்டிகேசுவரர் முதலிய பரிவார தேவதைகளும் இருப்பதால் சிவன் கோயில் வைணவத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு. இங்குள்ள சிவனை "பக்கல் நின்றார்" என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் பெருமாளைப்பற்றி பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார் நம்மாழ்வார், சடகோபர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்குதான் நம்மாழ்வார் பிறந்தார். இக்கோவிலில் கார்த்திகை, பங்குனி, ஏகாதசித் திருவிழாக்கள் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. யாளி மண்டபம், இரத மண்டபம், ஜஂயர் மண்டபம், சித்திர கோபுரம், இசக்கியம்மன், ஆண்டாள், குறுங்குடிவல்லித் தாயார் சந்நிதிகள் உள்ளன.

முண்டந்துறை புலிகள் புகலிடம்

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம்

திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு பலவகையான தாவரங்களும், பறவைகளும் காணக்கூடியதாக இருக்கின்றன. இங்குப் புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன. இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

ஆதாரம் : மாவட்ட நிர்வாகப்பிரிவுகள்