1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கைத்தொழில் புரட்சி இடம்பெற்ற போது உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதுடன், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 1908 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சம உரிமையின்மை ஆகியன அதிகரித்து வந்த நிலையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் பெண்களின் குரல் ஒங்கி ஒலித்தது. அதே வருடம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தை குறைக்கக் கோரியும், அதிக சம்பளம் மற்றும் வாக்குரிமை வழங்குமாறு கோரியும் 15,000 பெண்கள் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். 1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சியின் பிரகடனத்தை அடுத்து, பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா முழுவதும் முதலாவது தேசிய பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1910 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் மகளிர் அலுவலகத் தலைவர் கிளாரா செட்கின், சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடுவதற்கான யோசனையை டென்மார்க்கின் கொபென்ஹகெனில் முன்வைத்தார். பல்வேறு கலந்துரையாடல்களுக்குப் பின்னர் 1913 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதுடன், அன்று முதல் சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. வருடாந்திரம் மார்ச் 8 ஆம் தேதி பெண்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடுவதற்கும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய, இன, மொழி, கலாச்சார, பொருளாதார அல்லது அரசியல் எல்லைகளைக் கடந்து பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றிக் கொண்ட சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெண்கள் மீதான அடக்கு முறைகளும் துன்புறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. 2025 மகளிர் தின கருப்பொருள் - அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கானது: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல். சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8), உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான தைரியமான அழைப்பு இதுவாகும். 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்” என்பதாகும். அனைவருக்கும் சம உரிமைகள், அதிகாரம் மற்றும் வாய்ப்புகளை அளிக்கவும் யாரும் விடுபடாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆண்டின் கருப்பொருள் அழைப்பு விடுக்கிறது. இந்தத் தொலைநோக்குப் பார்வையானது அடுத்த தலைமுறையை - இளைஞர்களை, குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களை - நீடித்த மாற்றத்திற்கான கிரியா ஊக்கிகளாக மேம்படுத்தும். மேலும், 2025-ம் ஆண்டு, பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டு தளத்தின் 30-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு முக்கிய தருணமாகும். இந்த ஆவணம் உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கான மிகவும் முற்போக்கான மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட செயல்திட்டமாகும். எதிர்வரும் காலத்திலாவது பெண்ணியத்தை மதித்து, பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து, பாலின சமத்துவத்தை பேணுவதற்கு நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும். ஆதாரம் : திட்டம் மாத இதழ்