அறிமுகம்

இணைய இதழ்கள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்தாலும் சில குறைகளையும் கொண்டுள்ளன. அவற்றைக் களையும் போதுதான் இணைய இதழ்கள் உரிய வளர்ச்சியை எட்ட இயலும். தமிழ் இணைய இதழ்கள் செய்திகளை வேகமாகக் கொடுப்பது, இணைய கட்டமைப்பை மாற்றியமைத்திருப்பது, வாசகர் கருத்துக்களுக்கு இடம் கொடுத்திருப்பது என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தாலும் கவனம் செலுத்த வேண்டியவைகளும் உள்ளன.

“செய்திகளை விரிவாக படிக்கவும் வசதிகள் கொள்ளப்பட வேண்டும். அச்சு ஊடகம் போன்று பக்க அளவுகள் குறித்த பிரச்சனைகள் கிடையாது என்பதால் அறிக்கைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நீதி மன்றத்தின் முக்கய தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை முழுமையாக வேறு ஒரு தொடர்பில் தரவும் முயற்சிக்கலாம்.

பார்வையாளர்கள் வெகுநேரம் திரையைப் பார்த்து படிக்கும்படியான வண்ணங்களை தேர்வு செய்ய வேண்டும். சில இணைய இதழ்களில் எழுத்துரு பிரச்சனை உள்ளதால் அவற்றை பார்வையிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அனைத்து இணைய இதழ்களும் ஒருங்குறியில் அமைந்தால் பார்வையாளரின் சிரமம் குறையும். வடிவமைப்பைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் சின்னங்கள், பொத்தான்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் சீராக ஒரே அமைப்பில் இருத்தல் வேண்டும். தமிழனை அடையாளம் காட்டும் சின்னங்களாக இருத்தல் நன்று. புகைப்படங்கள், அசைவூட்டுக் கோப்புகளைப் பெரிய அளவில் படைத்தல் கூடாது. இதற்குப் பதிலாக சிறிய அளவில் கொடுத்து, அவற்றைச் சொடுக்கியவுடன் பெரியதாகத் தோன்றச்செய்யலாம்.

“பக்க வடிவமைப்பில், வெவ்வேறு விதமான எழுத்துரு வரையறைகளை மின்னிதழ்கள் பயன்படுத்துகின்றன. இவற்றைக் கணினியில் பதிவிறக்கம் செய்வதும் எளிமையாக இல்லை. தொடக்கநிலை கணினிப் பயன்பாட்டாளரும் இந்த எழுத்துக்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் இது எளிமையாக்கப்பட வேண்டும். ஒத்த எழுத்துரு வரையறை எல்லா மின்னிதழ்களும் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும். உரைகள் மீப்பனுவல் இயந்திர மொழியில் எழுதப்படுவதால் தமிழ் அலக்கண மரபிற்கேற்பச் சொற்பிரிப்பு அமைவதில்லை. சில எழுத்துக்கள் மறைந்து விடுகின்றன. ஒலி-ஒளி-உரை ஆகிய கூறுகளுக்கிடையே ஒத்திசைவு, சமத்தன்மை ஆகியன இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக கட்டுரைகளைப் பகுப்பது நல்லது. கட்டுரைத் தலைப்பு, கட்டுரை ஆசிரியர் பெயர் என எந்த ஒன்றின் அடிப்படையிலும் மற்ற படைப்புகளை ஒரே இடத்தில் பார்க்கும் வசதியை உருவாக்குதல் அவசியம்.

அழிந்து வரும் கலைகளைக் காப்பாற்றும் வண்ணம் தமிழகக் கலைகளைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் பேட்டி எடுத்து இணைய இதழ்கள் பதிவு செய்ய வேண்டும். இதனால் அயல்நாட்டில் வாழும் தமழர்களின் வாரிசுகள் தமிழகக் கலைகளைத் தெரிந்து கொள்ளும் வரலாற்றுப் பெட்டகமாக இணைய இதழ்கள் விளங்கும். இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் இணைய இதழ்கள் சிறப்புப் பெறுவதுடன் உலகின் பல இடங்களில் வாழும் தமிழர்கள் பயன்பெறுவார்கள்.

இணைய இதழ்களும் அச்சிதழ்களும்

இணைய இதழ்களும் அச்சிதழ்களும் பல்வேறு இதழியல் பண்புகளோடு இருந்தாலும் அவை தொழிற்நுட்ப ரீதியாக வெவ்வேறு ஊடகங்களைச் சார்ந்துள்ளன. ஒவ்வொன்றும் சாதகமான கூறுகளைக் கொண்டுள்ளன. அச்சு இதழ்கள் மாவட்டம், மாநிலம் எனச் செய்திகளைப் பிரித்து வெளியிடும். ஆனால், இணைய இதழ்கள் உலகத்தமிழர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுகின்றன.

இணைய இதழ்கள் இணைய இதழ்களுக்குரிய அனைத்துப் பண்பியல்களையும் கொண்டு ஒளி, ஒலி ஊடகத்தின் வழி இயக்கப்படுகின்றன. அச்சிதழ்கள் செய்யாத பணியை இணைய இதழ்கள் செய்கின்றன. உலகத் தமிழர்களை இணையத்தின் வழி ஒன்றிணைக்கின்றன. இதனால் புலம்பெயர் தமிழர்கள் தாய் நாட்டில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இணைய இதழ்களில் படைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் உலகம் முழுக்க வாசகர்களையும் படைப்பாளிகளையும் பெற முடிகிறது.

அச்சிதழ்கள் செய்திகளை மறுநாள் தரும். ஆனால் இணைய இதழ்கள் உடனுக்குடன் தருகின்றன. இதனால் எப்போது பார்வையிட்டாலும் புதுப்புது செய்திகள் கிடைக்கின்றன.

“அச்சிதழ்களின் அளவு, பயன்படுத்தப்படும் தாள் ஆகியன இதழுக்கு இதழ் மாறுபடுகின்றன. மேலும் இதழ்களைத் தொடுவது, புரட்டுவது, முகர்வது போன்ற நடவடிக்கைகள் அழகியல், உளவியல் சார்ந்த சாதனங்களை அச்சு இதழ்களுக்கு வழங்குகின்றன. இவற்றை மின் இதழ்கள் தர இயலாது.

பயன்பாட்டாளர் நோக்கில் ஒரே நேரத்தில் ஒரே இதழை பலரும் வாசிக்கும்படியான வசதியை இணைய இதழ்கள் தருகின்றன. அச்சிதழுக்கு பக்க வரையறை உண்டு. இணைய இதழ்களுக்கு பக்க வரையறை இல்லை. எத்தனைப் பக்க செய்தியை வேண்டுமானாலும் வெளியிடலாம். இணைய இதழ்களில் உள்ள நூலகத்தளத்தின் மூலம் நாள்தோறும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு நூல்களை கற்கவும் வாங்கவும் வசதியுள்ளது. அச்சிதழ்களில் இவ்வசதி இல்லை. அதே சமயம் இணைய இதழ்கள் சில குறைகளைக் கொண்டுள்ளன. எழுத்துரு, பக்க வடிவமைப்பு, பிற உத்திகள் என அடிக்கடி மாற்றம் செய்வது வாசகர்களை சலிப்பூட்டும். இவை அச்சிதழ்களில் இல்லை.

இணைய இதழ்களும்-அச்சிதழ்களும் பல்வேறு ஊடகத்தன்மையால் மாறுபட்டாலும் இதழியல் பண்புகள், தகவல்களைப் பரப்புதல், தமிழனை அடையாளம் காட்டுதல் என்னும் முறையில் ஒத்தப் பண்பினைக் கொண்டுள்ளன. தகவல் பெறும் உரிமை என்பது பொருளாதார வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அவ்வகையில் இணையதள வசதி, தொழிற்நுட்பம் பெருமளவு எளிமைபடுத்தப்பட்டு அனைத்து விதமான மக்களையும் சென்றடையும் போது இணைய இதழ்களின் தன்மைகள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகலாம்.

சிற்றிதழ்கள்

தமிழில் உரைநடை வடிவம் தோன்றியதிலருந்து நவீன போக்குகளுக்கு ஈடுகொடுத்து தமிழ்தன்னை தகவமைத்துக் கொண்டது. இவ்வகையில் கடந்த 150 கால பரப்பளவில் தமிழ்மொழி அடைந்துள்ள உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழில் இதழியலின் தோற்றம் பல்வேறு மாற்றங்களை இலக்கிய உலகில் உருவாயின. 1812-இல் தோன்றிய ‘மாசத் தினசரிதைத்’ தான் தமிழின் முதல் இதழ் என்று இதழியல் ஆய்வாளர் அ.மா.சாமி கூற்றின்படி பார்த்தால் தமிழ் இதழியல் வரலாறு சுமார் இருநூறு ஆண்டுகால சிறப்புக்குரியது.

“இதழியல் சரித்திரத்தில் அதன் முதல் நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலகட்டங்களில் வெளியான எல்லா இதழ்களுமே சிற்றிதழ்கள்தான்! ஏனெனில் அவை 50 பிரதிகளாக தொடங்கி 500 பிரதிகள் வரைதான் அச்சடிக்கப்பட்டன. தமிழ் இதழியல் வரலாற்றில் தனிப்பெருமை சேர்த்த 1882-ல் ஜீ. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட ‘சுதேசிமித்திரன்’ இதழ்கூட அதிகபட்சம் ஆயிரம் பிரதிகளே அச்சேறின. இதுதான் அன்றைய உச்சமாயிருந்தது“

சிற்றிதழ்கள் என்பது தீவிரமான உள்ளடக்கத்துடன் குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றடையும் தமிழ் இதழ் ஆகும். இது செய்யுள், கவிதை, சிறுகதை, தொடர்கதை போன்ற இலக்கிய ஆக்கங்களையும் கருத்துரை, விமர்சனம், திறனாய்வு, துறை ஆய்வு, விவாதம், நேர்காணல் ஆகியவற்றை தாங்கிவரும். சிற்றிதழ்களின் முதன்மை நோக்கம் கருத்துப் பகிர்வே. வணிக நோக்கமின்றி நடத்தப்படுபவை. 1958-ஆம் ஆண்டு சி.சு. செல்லப்பா அவர்கள் வெளியிட்ட ‘எழுத்து’ தொடக்க கால சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கது.

பாரதி 1907-இல் ‘இந்தியா’ இதழை ஆரம்பித்ததோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்காக ‘பால பாரதம்’, மாலை நாளிதழாக ‘விஜயா’, வார இதழாக ‘சூரியோதயம்’, ஆன்மிக இதழாக ‘கர்மயோகி’, இலவச இதழாக ‘தர்மம்’ என இதழியலில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழ் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது. இது வணிய நோக்கில் அமையாததால் விமர்சன கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டது. புனிதங்களை கட்டுடைப்பதிலும் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ்கள் பங்கு கொள்கிறது. விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியும், பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சனைகள் பற்றியும் சிற்றிதழ்கள் குரல் எழுப்புகின்றன.

அவ்வகையில் இரட்டைமலை சீனிவாசனாரின் ‘பறையன்’(1893), அயோத்திதாச பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’(1907) குறிப்பிடத்தக்க சிற்றிதழாக அமைகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்திலும், பெரியாரின் திராவிட இயக்க சித்தாந்தத்தாலும் தமிழில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் தோற்றம் பெற்றன.

‘நான் எழுதியதை நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சிட்டு, நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும், ‘குடியரசை’ வெளியிட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை’ என்றார் பெரியார். இந்த பிடிவாதமும், லட்சிய உறுதியுமே சிற்றிதழ்கள் நடத்தியோரை இயக்கின. தமிழ் மொழிக்கு அழியாத புது படைப்புகளையும் படைப்பாளர்களையும் தந்தது.

வெகுஜன இதழ்கள் வணிக நோக்கில் இயங்குவதால் மேம்போக்கான செய்திகள், பரபரப்பு, சினிமா போன்றவைக்கு இடம் தந்துவிடுகின்றன. ஆயினும், சிற்சில நல்ல அம்சங்களும் இடம் பெற்று தீவிர வாசகர்களையும் தக்கவைத்துக் கொள்கின்றன.

‘குமுதம்’ போன்ற வெகுஜன பத்திரிக்கை நிறுவனங்கள் கூட தீவிர இலக்கிய பத்திரிக்கை வாசகர்கள் வட்டத்தை நம்பி ‘தீராநதி’ என்ற இலக்கிய இதழை நடத்தி வருகிறது. காலச்சுவடு, உயிர்மை, வார்த்தை, உயிர்எழுத்து, பூவுலகு, பாடம், நிழல், யுகமாயினி, கவிதா சரண், ரசனை போன்ற எண்ணற்ற இதழ்கள் இன்று சிறந்த கட்டமைப்போடும் உள்ளடக்கத்தோடும் வருகிறது. அதற்கு தொடக்கக் கால சிற்றிதழ்களின் முன்னோடிகளின் உழைப்பேயாகும். அதன் காரணமாக இன்று சிற்றிதழ்கள் கூட ஓரளவு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சியால் சிற்றிதழ்களின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கி இணையத்தில் இணைய இதழ்கள் சிற்றிதழாக வெளிவருகின்றன.

இணைய இதழ்களும் சிற்றிதழ்களும்

வணிக இதழ்களின் செயல்பாட்டில் விரும்பம் இல்லாத நிலையிலும் ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்தக்களை மாற்றுவழியில் வெளிப்படுத்த விரும்பியவரிகள் கொண்டு வந்ததுதான் பெரும்பாலான சிற்றிதழ்கள்.

குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப் போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் தேவையாக உள்ளது. மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கான வாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. உலகில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தாய்நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் தோற்றுவித்த தமிழ் இணைய இதழ்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் இவைகளுக்கான வாசகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எனவே, தமிழ் இணைய இதழ்களை சிற்றிதழ்களாகவே கருதவேண்டும்.

அச்சிதழ்கள் வளரும் எழுத்தாளர்கள் நெருங்க இயலாத அளவிலேயே உள்ளன. இணைய இதழ்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களை வளர்த்தெடுக்கும் பயிற்சிக் களங்களாகவும் அமைகின்றன. இப்பண்புகளால் இணைய இதழ்கள் சிற்றிதழ்களைப் போல்தான் உள்ளது.

சிற்றிதழ்கள் கலகக்காரர்களின் குரல்களை ஒலிக்கச்செய்கிறது. சிற்றிதழ்கள் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார்ந்த விஷயங்களை ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்துகிறது. அவ்வகையில் வெகுஜன அச்சிதழ்கள் தவிர்த்து வந்த ஆழப்பிரச்சனைகளையும் கூடன்குள அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளுர் மக்களின் போராட்டத்தையும் இணைய இதழ்கள் எழுதியும் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிசெய்தும் வாசகர்களுக்கிடையே தீவர ஆதரைவத் தேடித்தந்தன. அதிக வாசகர்களை கொண்டு அச்சுப் பிரதியாக வெளியாகும் பல நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் பல இணைய இதழ்களாகவும் வெளிவருகின்றன. இவை பெரும்பாலும் அச்சுப் பிரதியில் உள்ள படைப்புகளை அப்படியே இணையத்தில் வெளியிட்டு வருவதால் இவற்றை இணையச் சிற்றிதழ்கள் கீழ் கொண்டு வர இயலாது.

இதுபோல் வணிக நோக்கத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் செயல்பட்டு வரும் சில இணைய இதழ்கள் தமிழ் பதிவையும் கொண்டு இருக்கின்றன. இந்த இணைய இதழ்களின் தமிழ் வழியிலான வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் மொத்தத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாட்டில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் என்பதால் அவற்றையும் இணையச் சிற்றிதழ்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது.

தமிழ் இணையச் சிற்றிதழ்கள் இலக்கியச் செயல்பாடுகளோடு நின்றுவிடாமல் சமூக தளத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் அரசியல் போக்குகளையும் ஆழமாக விரிவாக அலசுகின்றன. அச்சிதழ்களில் வெளிப்படாத தரவுகளும் தெளிவும் தீர்வும் இணையச் சிற்றிதழ்களில் வெளியிடப்படுகின்றன.

தேடல்கள் நிறைந்த இளந்தலைமுறையினருக்கு, ஆங்கில இதழ்களுக்கு இணையான அல்லது அதற்கும் மேலான செய்தி கட்டுரைகளை, விமர்சன கட்டுரைகளை தமிழில் தருகின்றன இணைய சிற்றிதழ்கள். இத்தகைய கட்டுரைகளில் வெளியிடப்படும் புதுப்புது சொற்களும், செறிவான உரைநடையும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன.

ஆதாரம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்