வெப்பத்தை வெல்வோம் ! கட்டுரை ஆசிரியர் முனைவர்.இரா.பிரபாகரன் உதவிப் பேராசிரியர் (கணிதம்)Coimbatore institute of Technology Coimbatore -641014 & கோவை மாவட்டத் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் rpcitcbe@gmail.com கோடைக்காலம் வந்துவிட்டாலே வெப்பநிலை அதிகரித்து உடல் சோர்வு, தாகம், தலைச்சுற்றல், அசௌகரியம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக சமீப காலங்களில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலைகள் (Heat Waves) அதிகரித்து வருகின்றன. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் வெயிலுடன் போராடுவதற்குப் பதிலாக, அதை அறிவியல் முறையில் புரிந்து கொண்டு அதற்கேற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், கோடைக்காலத்தையும் நலமாகக் கடக்க முடியும். அறிவியல் அறிவும் பாரம்பரிய அனுபவமும் இணைந்த சில எளிய நடைமுறைகள் நம்மை பாதுகாக்க உதவும். வெப்ப அலை என்றால் என்ன? சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட ,அதிகமாகவும் தொடர்ந்து நீடித்தும் , இருக்கும் கடுமையான வெப்ப நிலையை வெப்ப அலை என்று அழைக்கிறோம். இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) கூற்றுப்படி, சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40C க்கும், மலைப்பாங்கான பகுதிகளில் 30C க்கும் அதிகமாக, தொடர்ந்து இரண்டு நாட்கள் இருந்தால் அது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை, அரிதாக ஜூலை வரை நீடிக்கலாம்.இந்த நிலையில் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படும் அபாயம் உள்ளது. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் வயதான பெரியவர்கள் சிறு குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனவே இந்தக் குழுவினரை அதிக கவனத்துடன் பாதுகாப்பது மிகவும் அவசியம். வெப்பத்தை குறைக்கும் அறிவியல் வழிகள் கோடைக்காலத்தில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களில் சிறிய மாற்றம் செய்தாலும் உடல் வெப்பத்தை குறைக்க முடியும். வெள்ளை நிற பொருட்கள் உதாரணமாக, வெப்பமான காலங்களில் நாம் பயன்படுத்தும் பொருட்கள், குறிப்பாக நிறங்கள், வெப்பநிலையை எவ்வாறு பாதிக்கின்றன . கருப்பு நிறம் அதிக வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால், கருப்பு நிற குடை அல்லது உடை மீது நேரடியாக சூரிய ஒளி படும் போது, தொடர்பில் இருக்கும் உடலில் வெப்பம் அதிகமாக உருவாகி, உஷ்ணம் அதிகரிக்கும். அதே நேரத்தில், வெள்ளை நிற பொருட்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் (reflection) தன்மை கொண்டவை. ஆகவே வெள்ளை நிற குடையை பயன்படுத்தினால், சூரிய ஒளி நேரடியாக உடலை தாக்காது; வெள்ளை நிறம் ஒளியை வெளியே பிரதிபலிப்பதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியுடன் இருக்கும். ஈரமான துணி வெளியில் செல்லும் போது கழுத்தில் சிறிது ஈரமான துணி வைத்துக்கொண்டால் உடல் வெப்பம் குறையும். சாலையில் நடக்கும் போது எப்போதும் நிழல் பக்கம் நடப்பது நல்ல பழக்கம். மேலும் காலில் செருப்பு அணிவது அவசியம், ஏனெனில் வெப்பமான தரை உடலின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடும். நீர்ச்சத்து மேலாண்மை கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் .ஃபிரிட்ஜ் தண்ணீருக்கு பதிலாக மண் குடத்தில் வைத்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை தரும். மோரில் சிறிது உப்பு மற்றும் சீரகம் சேர்த்து குடித்தால் வியர்வையால் இழக்கும் தாது உப்புகள் மீண்டும் கிடைக்கும். மேலும், காரமான மற்றும் அதிக எண்ணெய் உணவுகளை குறைத்து தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது நல்லது. எலக்ட்ரோலைட் பானம் வெப்பத்தால் வியர்வை மூலம் உடலில் இழக்கும் உப்புச் சத்துகளை மீட்டெடுக்க, வீட்டிலேயே ஒரு எளிய எலக்ட்ரோலைட் பானம் தயாரிக்கலாம். இதற்காக 1 லிட்டர் தண்ணீர், ¼ டீஸ்பூன் உப்பு மற்றும் 6 டீஸ்பூன் சர்க்கரை தேவை. முதலில் தண்ணீரை காய்ச்சி வடிகட்டிய பிறகு, அதில் உப்பும் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதுவே எளிய எலக்ட்ரோலைட் பானமாகும். இதனை அளவுடன் பருகுவதன் மூலம் உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்த உதவும். வீட்டில் குளிர்ச்சி அடிக்கடி தரையை தண்ணீரால் துடைப்பதாலும் மொட்டை மாடியில் தண்ணீர் தெளிப்பதாலும் வீட்டின் வெப்பநிலையை குறைக்கலாம். இரவில் தூங்கும் போது தரையை தண்ணீரால் துடைத்து விட்டு பாயில் உறங்குவதால் உடல் வெப்பம் பெறாமல் நிம்மதியான உறக்கத்தினை பெறமுடியும். ஜன்னல்களுக்கு லேசான நிற திரைகள் பயன்படுத்தினால் வெயில் வெப்பம் வீட்டிற்குள் நூழைவதை தவிர்க்கலாம் . பகலில் கவனம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும்; அதனால் அந்த நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டியிருந்தால் இலகுரக மற்றும் வெண்மை நிற ஆடைகளை அணியுங்கள். கடுமையான உடல் உழைப்பை தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி பயன்படுத்தி வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். மேலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? வயது வந்த ஆண்கள் ஒரு நாளில் சுமார் 2.6 முதல் 3.7 லிட்டர் வயது வந்த பெண்கள் 2.1 முதல் 2.7 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடும். தினமும் குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை சுமார் 1 லிட்டர் , 4 முதல் 8 வயது 1.2 லிட்டர், 9 முதல் 13 வயது 14 முதல் 1.6 லிட்டர் , 14 முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் சுமார் 1.8 முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும் கர்ப்பிணி பெண்களும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் உடல்நலத்திற்காக தினமும் சுமார் 2.3 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியமானது .விலங்குகள் மற்றும் பறவைகளையும் காப்போம் கோடைக்காலத்தில் மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள் மற்றும் விலங்குகளும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதியுறுகின்றன . வீடுகளின் அருகில் சிறிய பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் சிறிது உணவு வைத்து உதவலாம். இது மனிதநேயத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வளர்க்கும். வெப்பத்தை வெல்வோம் ! அறிவியலால் ஒன்றிணைவோம்!