மழைநீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் பலநாட்டவர்க்கும் இருந்துள்ளது. ஆனால், நீர்த்தேக்கவகையில் வேறுபாடுள்ளது. கி.மு.3000 ஆண்டைச் சேர்ந்த சோர்டானிலுள்ள சாவா அணை (Jawa Dam in Jordan) தொன்மையானது என்கின்றனர். பழந்தமிழர் நாகரிகக்கூறுகள் உள்ள மெசபடோமியாவில் தொடக்கக்காலங்களில் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பெற்றிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், எகிப்துநாட்டவர் தமிழ்நாட்டு அணைக்கட்டு வல்லுநர்களை அழைத்து அணை கட்டும் வகையை அறிந்ததாக அந்நாட்டிலேயே குறிப்புகள் உள்ளன. எனவே, அணைக்கட்டு நுட்பவியல் தமிழ்நாட்டில் இருந்தே சோர்டானுக்கும் பரவியிருக்க வேண்டும் எனலாம். இல்லையேல் எகிப்தியர் சோர்டான் நாட்டவரை அழைத்து அணைக்கட்டு நுட்பம்பற்றி அறிந்திருப்பர். அணைக்கட்டு அமைப்பில் தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளமையே இதற்கான காரணமாகும். உலகிலேயே பழைமையான இன்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரே அணை திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்லணைதான். காவிரிநீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகச் சோழவேந்தன் கரிகால்பெருவளத்தானால் கட்டப்பெற்றது. இவ்வேந்தன் பாசனத்திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றிகண்டமை புலவர் முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப்படையிலும் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாடிய பட்டினப்பாலையிலும் குறிக்கப்பெற்றுள்ளது. கல்லணையின் நீளம் 1080 அடி; அகலம் 40 அடி முதல் 60 அடி வரை; ஆழம் 15 அடி முதல் 18 அடி என அமைந்துள்ளது. ஆனால், சாவா அணை, நீளம் 260 அடி, அகலம் 15 அடி, ஆழம் 15 அடி என மட்டுமே அமைந்திருந்ததாகும். எனவேதான் வயவர் ஆர்தர் தாமசு காட்டன் என்னும் ஆங்கிலேயப் பாசனப்பொறியாளர் (Sir Arthur Thomas Cotton:1803-1899) கல்லணையை மிகுநேர்த்தியான மாபெரும் அணை (grand anikut) என்கிறார். அணைக்கட்டு என்னும் சொல் ஆங்கிலத்தில் இடம்பெற்றதிலிருந்தே அணைக்கட்டு பிறநாடுகளில் இருந்ததில்லை என்பதை உணரலாம். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பெற்ற ஓர் அமைப்பு ஈராயிரம் ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுக்கப் பயன்பட்டுவருவது விந்தையிலும் விந்தையல்லவா! நீரைத்தேக்கி அணைகட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் புலவர் குடபுலவியனார் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வலியுறுத்திப் பாடியுள்ளார். மறுமை உலகிற்கான செல்வத்தை வேண்டினாலும், உலகையே ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து நீ ஆளவிரும்பினாலும் புகழுடன் இவ்வுலகில் வாழவிரும்பினாலும், நீ ஆற்றவேண்டிய அரும்பணி ஒன்றுள்ளது.நீரின்றிவாழமுடியாதஇவ்வுலகத்தில்பசிநீங்க உணவளிப்பவரே உயிரளித்தவராவர்! உணவு என்பது நில விளைச்சலுடன் சேர்ந்த நீருமாகும்! வான்மழையை எதிர்நோக்கி இருக்கும் வறண்ட நிலத்தால் எப்பயனும் இல்லை. எனவே, நான் கூறப்போவதை மறவாமல் உள்ளத்தில் கொள்க! பள்ளத்தாக்கிலே நீரினைத் தேக்கி நீர்நிலைகளை உண்டாக்குபவர்களே, மறுமை இன்பங்களையும் புகழையும் இவ்வுலகில் பெற்றுமகிழ்வோராவர். அவ்வாறு நீரினைத் தேக்கி விளைச்சலுக்கு உதவாதவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்த இயலாதவர்களாவார் எனக்கூறுகையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண்தட் டோரே!தள்ளா தோர்இவண் தள்ளா தோரே! (புறநானூறு 18:28-30)(தட்டு - நீர்நிலை) நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசனஅறிவியலையும் அவ்வாறு பயன்பெறுவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் பண்டைத்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். நன்றி: சொல்வயல் தி.ஆ. 2057, துலை (ஐப்பசி) நவம்பர் 2026) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக வெளியீடு