இரும்பின் தொன்மை இரும்பைப் பயன்படுத்தும் கலை மனித வரலாற்றின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரும்புப் பயன்பாடு தன்னிறைவு பெற்ற வேளாண்மைப் பொருளாதாரத்தை மிகை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றியது. இதன் விளைவாக மக்கள் தொகைப்பெருக்கம் ஏற்பட்டுப் பல குடிவழிச் சமூகம் உருவானது. அதனுடன் பல்வேறு அடிப்படை மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டன. இரும்புத் தொழில்நுட்பம் பண்டைய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை விரைவாக ஊக்குவித்தது என்றே கூறலாம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட, இரும்பின் அறிமுகம் மனிதகுல வளர்ச்சியில் முக்கியமான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தியாவில் இரும்பின் அறிமுகம் பற்றிய கல்விசார் விவாதம் நீண்ட காலமாக நடைபெற்றுவருகின்றது. இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட காலமானமாது, பல்வேறு அறிஞர்களின் தளராத முயற்சியின் காரணமாகப் கி.மு. 1100இல் இருந்து கி.மு. இரண்டாயிரம் ஆண்டாகக் கருதப்படுகிறது (படம் 3; அட்டவணை 1). எனவே, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறுபட்ட சூழலியல் மண்டலங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு கதிரியக்கக் காலக்கணிப்புகள் வாயிலாக இந்தியாவில் இரும்பின் அறிமுகம் கி.மு. 2000ஆம் ஆண்டு என அறுதியிடப்பட்டுள்ளது (Seshadri 1955:38-41; Sundara 1973:239-251; Deo 1973:131-137, 1991:189-198; Posschl 1988:169-196; Moorti 1994; Rajan and Yathees Kumar 2013:279-295). மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகளும் (Chronometric dates) அவற்றை உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆதாரம்: இரும்பின் தொன்மை