கீழடி அகழாய்வு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டத்தில் கீழடி கிராமத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் 110 ஏக்கருக்கும் அதிகமான அளவில், விரிந்த நிலப்பரப்பில், பண்பாட்டு குவியல்களைக் கொண்ட மண் மேடு அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறை இந்தியத் தொல்லியல் துறையின் [Archaeological Survey of India (ASI)] பெங்களுரூ அகழாய்வுப் பிரிவின் வாயிலாக கீழடியில் 2014-2015, 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இத்தொல்லியல் தளத்தில் மறைந்துள்ள மதிப்புறுப் பொருட்கள் மற்றும் தொல்லியல் சின்னங்களை வெளிக்கொணரும் பொருட்டு, மாநிலத் தொல்லியல் துறையானது மத்தியத் தொல்லியல் ஆலோசனை வாரிய [(Central Advisory Board for Archaeology (CABA)] நிலைக் குழுவின் அனுமதி பெற்று அகழாய்வு மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை (Tamil Nadu State Department of Archaeology) கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது. அறிவியல் காலக்கணிப்பு சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்து நிலவி வந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்தது என்பதையும் வைகைக் கரை நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதையும் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு உறுதி செய்துள்ளது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது. வைகை ஆற்றங்கரை நாகரிகம் கீழடியில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் அகழாய்வுச் சான்றுகள் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர் என்றும் மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்றும் அறிகிறோம். கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய கட்டடமைப்புகள், உருளை வடிவப் பானைகள், உலை, கால்நடை எலும்புகள், கணிசமான இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களாலான மணிகள், கண்ணாடிகள், சங்குகள், எடைக்கற்கள், முத்திரைகள் மற்றும் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், குறியீடுகள் ஆகியவற்றின் மூலம் கீழடியானது தொழில் நகரம் மற்றும் வாழ்விடப்பகுதியாக அமைந்திருக்கக்கூடும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. பிற பகுதிகளில் கிடைக்கும் எடைக்கற்கள், முத்திரை மற்றும் விலைமதிப்பற்ற கற்களில் செய்யப்பட்ட மணிகள், சங்ககாலச் சமூகத்தின் வலுவான வணிக முறையினை சுட்டிக்காட்டுகிறது. வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். முக்கிய கண்டுபிடிப்புகள் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் அரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஏராளமான கட்டுமானப் பொருட்கள் (செங்கல் கட்டுமானம், சுடுமண்ணாலான உறை கிணறுகள் மற்றும் விரல்களால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட பள்ளங்கள் வழியாக மழை நீர் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட கூரை ஓடுகள் விழுந்த நிலையில்) உள்ளிட்ட தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன. இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்களி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது. மேலும், தங்கத்தினால் ஆன சில ஆபரணப் பாகங்கள், செம்பிலான தொல்பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண்ணாலான விளையாட்டுப் பொருட்கள் (சதுரங்கப் பொருட்கள்), வட்டச் சில்லுகள், காதணிகள், மனிதன் மற்றும் விலங்குகளின் உடைந்த மற்றும் முழு பொம்மை உருவங்கள் மற்றும் சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், மதிப்பு குறைவான கல் மணிகள் இரத்தினக் கல் மணிகள் (அகேட்), சூது பவள மணிகள் (கார்னீலியன்) மணிகள், படிக மணிகள் மற்றும் தொன்மை வாய்ந்த மட்பாண்ட வகைகளின் எச்சங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு நிறப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்பு பானை ஓடுகள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், ரோமானிய முத்திரையிட்ட பானை ஓடுகள், அரிட்டேன் பானை ஓட்டுத் துண்டுகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகள் கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய முடிகிறது. தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்துக்கு கீழடி திருப்புவனம் வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது. அழகன்குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன்குளம் துறைமுகப் பட்டினத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. தமிழி பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் பானைகளைச் சுடுவதற்கு முன்னரும் மற்றும் சுட்ட பின்னரும் வரையப்பட்ட கீரல் குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் நிறைய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதை வெளிப்படுகிறது. கய என்ற தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நல்ல தரத்திலுள்ள செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு (Red Slipped Ware) YD4/2 என்ற குழியில் 1.87 மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது உடைந்து காணப்படுவதால், இதனுடன் அதிகமான தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துகள் இடம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. விலைமதிப்பற்ற மணிகள் மிகவும் நேர்த்தியான விலைமதிப்பற்ற கல்மணிகளாலான சூது பவளம் (கார்னீலியம்), அகேட், அமெதிஸ்ட் போன்ற மணிகள் கீழடியில் வெவ்வேறு அகழாய்வுக் குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடமேற்கு இந்தியாவின் தற்போதைய உள்ள மகாராஸ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் இங்கு தொழில் மற்றும் வணிகத் தொடர்பு மிகவும் சிறந்த முறையில் விளங்கியுள்ளது என அறியமுடிகிறது. எடைக்கற்கள் பஸால்ட் வகைக் கற்களாலான நான்கு எடைக்கற்கள் முறையே 1.45 மீ, 1.50 மீ. 1.53 மீ. மற்றும் 1.22 மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. தட்டையான அடித்தளத்துடன் கோள வடிவத்தில் மூன்று கற்களும், முழுவதுமாக கோள வடிவத்தில் ஒரு கல்லும் காணப்படுகிறது. இவற்றின் எடை முறையே 300 கிராம், 15௦ கிராம், 18 கிராம் மற்றும் 8 கிராம் கொண்டுள்ளன. சுடுமண்ணாலான முத்திரை சுடுமண்ணாலான முத்திரை ஒன்று YD 4/4 என்ற குழியில் 0.75 மீ ஆழத்தில் கிடைத்துள்ளது. கையால் செய்யப்பட்ட கூம்பு வடிவத்தினாலான இந்த முத்திரை இரு முனைகளிலும் இரண்டு துளைகளைக் கொண்டுள்ளது. இதன் நடுப்பகுதி ஆமையின் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. விலங்கின் எலும்பு 2.12 மீ. ஆழத்தில், 0.80 மீ. நீளம் கொண்ட மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி கண்டெடுக்கப்பட்டது. இதனுடன் இணைக்கப்பட்ட விலா எலும்புகளின் ஒரு பகுதி புதைக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் கிடைத்துள்ளன. முத்து மணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன. குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்து வருகிறது. சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறு தான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கீழடி அருங்காட்சியகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: மதுரையும் கீழடியும் வேளாண்மையும் நீர் மேலாண்மையும் கலம் செய்கோ ஆடையும் அணிகலன்களும் கடல்வழி வணிகம் வாழ்வியல் தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள் தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 1 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது. வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல் கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (Animation) வாயிலாக காட்சிப்படுத்தப்படுகிறது. கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர் காட்சி (Virtual Reality Exhibition) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பாக மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக்கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் அரிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக் குழிகள், செங்கற்கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளைத் தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 Dimension) பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி கோயில் நகரமான மதுரைக்கு மிக அருகிலுள்ள பகுதியாகும். இங்கு வரலாற்றுத் தொன்மை கொண்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதன் மூலம் பண்டைய தமிழர் நாகரிகத்தின் பண்பாட்டு வளம் சுட்டிக் காட்டப்படுவதால் கீழடியில் மறைந்துள்ள பண்பாட்டு மதிப்புறுப் பொருட்களை தேடும் பணிகளை எதிர்காலத்தில் தொடர்வதும், பண்டைய சமூகத்தின் பண்பாட்டு வளங்களை வெளிப்படுத்துவதும் காலத்தின் அவசியத் தேவையாகிறது. ஆதாரங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு சிவகங்கை மாவட்டம்