உலகின் மிகப்பெரிய நதித் தீவின் 4,000 ஆண்டுகால பருவநிலை வரலாறு குறித்த முக்கிய ஆய்வுத் தரவுகள் வெளியீடு உலகின் மிகப்பெரிய மக்கள் வசிக்கும் நதித் தீவான அசாமின் மஜூலி தீவின் (Majuli Island, Assam) சுமார் 4,000 ஆண்டு கால பருவநிலை, தாவர வரலாறு குறித்த புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் இருப்பிடமாகவும், நவ-வைணவ கலாச்சாரத்தின் முக்கிய மையமாகவும் விளங்கும் இத்தீவு, பிரம்மபுத்திரா நதியின் தொடர் வெள்ளப்பெருக்கு, கடுமையான மண் அரிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஆய்வு, மஜூலி தீவின் பருவநிலை மாறுபாடு, தாவரங்களில் ஏற்பட்ட மாற்றம், வெள்ளத்தின் இயக்கவியல் குறித்த நீண்டகாலத் தரவுகளை வழங்குவதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான தற்காப்பு மற்றும் தகவமைப்பு உத்திகளை வடிவமைக்கவும் உதவுகிறது. அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான லக்னோவில் உள்ள பீர்பால் சாஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் [Birbal Sahni Institute of Palaeosciences (BSIP), Lucknow] விஞ்ஞானிகள், மஜூலி தீவில் இந்த முன்னோடி தொல் சூழலியல் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மஜூலி தீவில் உள்ள சாகலி சதுப்புநிலப் பகுதியிலிருந்து 150 செ மீ ஆழமுள்ள வண்டல் படிவுகளைச் சேகரித்து, கடந்த கால தாவரங்களை பகுப்பாய்வு செய்யவும், வெள்ளத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவும் நுண்ணிய ஆய்வுகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டனர். இத்தீவின் முழமையான சுற்றுச்சூழல் பதிவு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் புதிய ஆராய்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் நிலையான நிலப் பயன்பாட்டிற்கு வலுவான அறிவியல் அடிப்படையை வழங்குகிறது. இதன் மூலம், தொடர் வெள்ளம், நில இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான பேரிடர் மேலாண்மைக் கொள்கைகளை உருவாக்க இது பெரிதும் உதவும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267496®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்