ஆராய்ச்சிப் பின்னணி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சேர்மங்களில் இருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த கரைப்பான்களைப் பயன்படுத்தி, மின்னணுக் கழிவுகளில் இருந்து (ewaste) மதிப்புவாய்ந்த உலோகங்களை மீட்டெடுப்பதற்கான புதுமையான, பசுமையான முறையை உருவாக்கியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பாதுகாப்பான, சுற்றுச்சூழல் திறனுள்ள மின்னணுக் கழிவு மறுசுழற்சி நடைமுறைகளுக்கு இது வழிவகுப்பதுடன், இந்தியாவின் வட்டப் பொருளாதார இலக்குகளுக்கு உதவியாகவும் இருக்கும். மின்-கழிவுகளில் உள்ள வளங்களும் தற்போதைய சவால்களும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கழிவு நீரோடைகளில் ஒன்றான மின்-கழிவுகளில், தாமிரம், தங்கம், இரும்பு போன்ற மீளக்கூடிய உலோகங்கள் ஏராளமாக உள்ளன. இருப்பினும், வழக்கமான மறுசுழற்சி முறைகள் கடுமையான இரசாயனங்களை மட்டுமே நம்பியுள்ளன. இவை நச்சுக் கழிவுகளை உற்பத்தி செய்வதுடன் பெரும்பாலும் மறுசெயலாக்கம் தேவைப்படும் வகையில் தூய்மையற்ற வடிவங்களில் உலோகங்களை உருவாக்குகின்றன. இந்தச் சவால்களைச் சமாளிக்க, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர் குழுவினர், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் உலோகங்களைக் கரைக்கக்கூடிய மக்கும் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சிறப்பு திரவக் கலவைகளான ஆழ்ந்த யூடெக்டிக் கரைப்பான்களைப் (Deep Eutectic Solvents - DES) பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். செம்பு மீட்பு மற்றும் நானோ பொருட்கள் உருவாக்கம் இந்த ஆய்வில், தைமால் (தைமில் இருந்து பெறப்பட்டது) மற்றும் கேப்ரிக் அமிலத்திலிருந்து ஒரு பசுமைக் கரைப்பானை குழுவினர் உருவாக்கினர், இது செம்பு உலோகத்தை திறம்படக் கரைத்தது. கரைக்கப்பட்ட செம்பு பின்னர் நச்சுத்தன்மையற்ற இரசாயனமான டிரைசோடியம் சிட்ரேட்டைப் (tridodium citrate) பயன்படுத்தி பாதுகாப்பாக பிரித்தெடுக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளில் செம்பு உலோகம் நானோ துகள்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு காப்பர் வடிவங்களும் இரும்பு மீட்பும் கரைசலின் pH-ஐ சரிசெய்வதன் மூலம், காப்பர் ஆக்சைடு நானோ துகள்கள், தூய காப்பர் உலோகம் போன்ற பல வகையான காப்பர்களை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடிந்தது. அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகைகள் மற்றும் காப்பர் தாள்கள் போன்ற உண்மையான மின்-கழிவு மாதிரிகளிலிருந்து இரும்பை மீட்டெடுக்க இந்த செயல்முறை வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டது. ஆராய்ச்சி குழு மற்றும் துறைசார் ஒத்துழைப்பு இந்த ஆராய்ச்சியை உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறை பேராசிரியர் ரஞ்சித் பவுரி, வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் எஸ். புஷ்பவனம்; முனைவர் பட்ட ஆராய்ச்சி அறிஞர் குமாரி சினு குரியன் ஆகியோர் இரு துறைகளுடனும் இணைந்து நடத்தினர். ஆராய்ச்சியின் தனித்துவம் இந்த ஆராய்ச்சியின் தனித்துவமான அம்சங்களைப் பற்றி விரிவாகக் கூறிய ஐஐடி மெட்ராஸின் வேதியியல் பொறியியல் துறையின் பேராசிரியர் எஸ். புஷ்பவனம், "வழக்கமான அமில அடிப்படையிலான பிரித்தெடுக்கும் நுட்பங்களைப் போலன்றி இந்த முறை மக்கும் தன்மை கொண்டதாகவும், நச்சுத்தன்மையற்றதாகவும், நீர் திறன் கொண்டதாகவும் இருந்தது. அதே நேரத்தில் அபாயகரமான கழிவுகளை உருவாக்காது. பல உலோகங்களை மீட்டெடுத்து மதிப்புமிக்க நானோ பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்யும் இதன் திறன், தற்போதுள்ள பிற அணுகுமுறைகளை விட இதை பல்துறை மற்றும் நிலையானதாக ஆக்குகிறது" என்றார். சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் மேலும், ஐஐடி மெட்ராஸின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையின் பேராசிரியர் ரஞ்சித் பவுரி கூறுகையில், "இந்த பசுமை மீட்பு செயல்முறை, மின்-கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சேதத்தை கணிசமாகக் குறைக்கும் அதே வேளையில், கன்னி உலோகச் சுரங்கத்திற்கான தேவையைக் குறைக்கும். சமுதாயத்தைப் பொறுத்தவரை, இந்த கண்டுபிடிப்பு பாதுகாப்பான மறுசுழற்சி அமைப்புகள், தூய்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயற்கை வளங்களின் திறமையான பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இது இந்தியாவின் நிலைத்தன்மை மற்றும் நிகர-பூஜ்ஜிய உறுதிப்பாடுகளுடன் ஒத்துப்போகிறது" எனக் குறிப்பிட்டார். எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொழில்துறை மற்றும் மறுசுழற்சி நிறுவனங்களுடன் சோதனை அளவிலான கூட்டுமுயற்சியில் ஈடுபடுவது குறித்தும், நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப பரிமாற்றம், உரிமம் வழங்குதல் ஆகியவை பற்றியும் ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டு வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220920®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்