ஆசிரியர்களுக்கான குறிப்புகள் மாணவர்களுக்கு இந்த அமர்வினை விளக்குவதற்கு முன், ஆசிரியர்கள், இந்த செயல்தாள்களைச் செய்து பார்ப்பது நல்லது. பயிற்சி செய்து பார்க்கும்போது, நமக்கும் மாணவர்களுக்குள் சில சந்தேகங்கள் வரக்கூடும். ஆழ்ந்து உள்வாங்கி சிந்தித்துத் தெளிவு பெற்றால் தான் இந்தப் பயிற்சியைச் செய்ய மாணவர்களுக்கு உதவ முடியும். தகவல்கள் தொடர்பான செய்திகளைப் பகிர்வது சற்றே எளிது. நம்மை உள்நோக்கிப் பார்க்கும் பயிற்சி என்பதால் கருத்துகளை ஆசிரியர்களும் முழுமையாக உள்வாங்கினால் தான் மாணவர்களுக்குக் கடத்த முடியும். இப்படிச் செய்வது, பயிற்சிகளைச் செய்யும் போது மாணவர்களுக்கு வரக்கூடிய சந்தேகங்களைத் தீர்க்கவும், வழிகாட்டவும் உதவும். தன்னைத் தான் உள்நோக்கிப் பார்க்கும் பயிற்சி என்பதால், சிலர் இதற்குள் போகத் தயங்கக்கூடும். சிலர், தான் எழுதியதைப் பகிரத் தயங்கக்கூடும். மாணவர்கள், முழு மனதோடு இந்தப் பயிற்சியை செய்வது தான் முக்கியம். பகிர விரும்பாதவர்கள் பகிர வேண்டியதில்லை. ஆனால், பயிற்சியைச் செய்வது மிக முக்கியம் என்ற கருத்தை ஆணித்தரமாகப் பதிவிடுங்கள். ஆதாரம்: நான் முதல்வன்