செயல்தாள் 1 - நேரத்தை வெற்றிகொள்! எல்லோருக்கும் ஒரு நாள் 24 மணி நேரம் தான்! அதை சரிவரப் பயன்படுத்தினால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். உன்னுடைய நாளை நீ எப்படிக் கழிக்கிறாய்? இந்த அட்டவணை மூலம் அதைத் தெரிந்து கொள்வோமா? ஒரு தனித்தாளில் 24 மணி நேரத்தைப் பட்டியலிடவும். குறிப்பிட்ட நேரத்தில் நீ என்ன செய்தாய் என்பதை எழுதி அதற்கான குறிப்பு 1 / 2 / 3 குறிப்பிடவும். அந்தச் செயலை கீழ்க்காணும் வகைப்பாட்டிற்குள் எதைச் சேர்ந்தது எனக் குறிப்பிடவும்: ஆக்கப்பூர்வ வளர்ச்சி செயல்பாடு இளைப்பாறுதல் பின்னோக்கி இழுக்கும் செயல்பாடு இந்த மூன்று செயல்பாடுகளை முதலில் புரிந்துகொள்வோமா? குறிப்பு 1: ஆக்கப்பூர்வ வளர்ச்சி செயல்பாடு உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட நேரம், ஆக்கப்பூர்வ வளர்ச்சி செயல்பாடு. குறிப்பு 2: இளைப்பாறுதல் கைபேசி அல்லது தொலைக்காட்சியை அரைமணி நேரம் பயன்படுத்தினால் அது இளைப்பாறல். குறிப்பு 3: பின்னோக்கி இழுக்கும் செயல்பாடு கைபேசி அல்லது தொலைக்காட்சியை 2, 3 மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்து பயன்படுத்தினால் அது பின்னோக்கி இழுக்கும் செயல்பாடு. உங்கள் பட்டியலை நீங்களே அலசிப் பாருங்கள் - எதற்கான நேரம் அதிகமாக உள்ளது? ஆக்கப்பூர்வமான வளர்ச்சி செயல்பாட்டுக்கு என்றால் நேரம் உங்கள் வசப்பட்டுவிட்டது என்று அர்த்தம். நேரம் நான் என்ன செய்தேன்? குறிப்பு - 1 / 2 / 3 காலை 6:00-7:00 (எ.கா.) செய்தித்தாள் படித்தல் ஆக்கப்பூர்வ வளர்ச்சி செயல்பாடு 7:00-8:00 8:00-9:00 மாலை 6:00-7:00 7:00-8:00 8:00-9:00 செயல்தாள் 2 - உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் ஒரு நாளின் ஒவ்வொரு பொழுதிலும் உங்கள் உணர்வுகள் (உற்சாகம், கோபம், மகிழ்ச்சி, பயம், கவலை, நிறைவு) என்னவாக இருக்கின்றன? நேர்மறை உணர்வுகள் ஒவ்வொன்றும் நேர்மறை நிகழ்வுகளோடு தொடர்புடையன. இன்று இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என நினைத்தேன். முடித்துவிட்டேன். அப்போது உங்களுக்கு ஏற்படும் உணர்வு - மகிழ்ச்சி / திருப்தி. இன்று 10 பக்கங்கள் படிக்கவேண்டும் என நினைத்தேன், 2 பக்கங்கள் மட்டுமே படித்தேன். அப்போது உங்களுக்கு ஏற்படும் உணர்வு - வருத்தம் / தோல்வி உணர்வு. இவ்வாறு ஒவ்வொரு செயல்களின் மூலமும் பல்வேறு உணர்வுகள், நமக்கு ஏற்படும். கீழுள்ள அட்டவணையில் உங்கள் உணர்வுகளைப் பதிவு செய்யுங்கள்? அட்டவணையில், அ - பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொழுதுக்கும் நேற்று உங்கள் உணர்வு* என்னவாக இருந்தது என்பதற்கு ஏற்ப அட்டவணையில் ஆ - பகுதியில் அதற்குரிய இடத்தில் குறிப்பிட வேண்டும். (*உற்சாகம் / சோகம் / கோபம் / மகிழ்ச்சி / வருத்தம் / வெறுமை / சோர்வு / குழப்பம் / பெருமிதம் / பயம் / கவலை / அழுகை) உணர்வுகள் பற்றிய பதிவு அ ஆ காலையில் எழுந்த பொழுது இருந்த உணர்வு பிற்பகலில் இருந்த உணர்வு மாலையில் இருந்த உணர்வு இரவில் தூங்கும் முன்பு இருந்த உணர்வு மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களை உற்சாகப்படுத்துவதையும் வருத்தமான உணர்வுகள் உங்களைக் கவலையில் ஆழ்த்துவதையும் உணர்ந்திருப்பீர்கள். எதிர்மறை உணர்வுகளில் உழன்று கொண்டு இருக்காமல் அதிலிருந்து விடுபடும் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், இலக்குகளை எளிதில் அடையமுடியும். அதற்கேற்ப நமது செயல்களை / நிகழ்வுகளைச் சற்றே மாற்றிக் கொள்ளலாம். செயல்தாள் 3 - எதிர்மறை உணர்வுகளை நேர்மறையாக்குதல்! நிகழ்வு: இன்றைக்கு இயற்பியல் பாடத்தில் 20 பக்கங்கள் படிக்க நினைத்தேன். 10 பக்கங்கள் தான் படிக்க முடிந்தது. இதை ஒட்டிய உணர்வு: வருத்தம், தோற்றுப்போன உணர்வு. இதற்கு நேர் எதிரான உணர்வினை எழுதுங்கள். நேர் எதிரான உணர்வு: வருத்தமில்லை, கொஞ்சம் மனத் திருப்தி. இந்த உணர்வு வரவேண்டுமென்றால் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? சிந்தனை: 10 பக்கங்கள் நன்றாகப் புரிந்து படித்தேன். நாளை இதை 15 பக்கங்கள் என்று தீர்மானிப்பேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதே போல் நீங்கள் உங்களுக்குத் தொடர்புடைய இரு நிகழ்வுகளை எழுதி அதற்கான உணர்வு, நேர் எதிரான உணர்வு மற்றும் சிந்தனைகளைக் கீழே எழுதவும். நிகழ்வு 1 இதை ஒட்டிய உணர்வு நேர் எதிரான உணர்வு சிந்தனை நிகழ்வு 2 இதை ஒட்டிய உணர்வு நேர் எதிரான உணர்வு சிந்தனை கற்றதும் பெற்றதும் 1, 2, 3 செயல்தாள்கள்: நான் எந்த நிலையில் தற்போது இருக்கிறேன், என்னுடைய நேரத்தை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் ஒவ்வொரு நாளும் என்னுடைய உணர்வு எவ்வாறு இருந்தது? அதை எவ்வாறு சரி செய்துகொள்ளலாம் எனவும் தெரிந்து கொண்டேன். ஆதாரம்: நான் முதல்வன்