கற்றல் நோக்கங்கள் 12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்பது பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளுதல். நுழைவுத்தேர்வுகள் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளுதல். மாணவர்கள் தங்களது விருப்பத்துக்கும் திறனுக்கும் ஏற்ற படிப்பைத் தேர்வு செய்வது குறித்து புரிந்துகொள்ளுதல். மாணவர் சேர்க்கை குறித்தும், கல்வி உதவித்தொகை குறித்தும் விவரங்களை அறிந்து கொள்ளுதல். படிப்பில் உயர்ந்தது, தாழந்தது என எதுவும் கிடையாது. எந்தப் படிப்பாக இருந்தாலும் படித்த திறமையான மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உயர்கல்வியே ஏணிப்படி! நமது நாட்டின் எதிர்காலம், நமது பள்ளி வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுகிறது. தனிப்பட்ட மக்களுக்கு நன்மை பயப்பதுடன் சமூக மறுமலர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் கல்வி இன்றியமையாதது. மனித இனத்தைப் பொறுத்த வரை, கல்வி என்பது முடிவற்றது. வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கல்வியே முதல் படி. வசதி வாய்ப்புகள் குறைந்த, ஏழை மாணவர்கள், பொருளாதார அடிப்படையில் முன்னேறுவதற்கும், வேலையைப் பெறுவதற்கும் உயர்கல்வியே ஏணிப்படி. எனவே மாணவர்கள், சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரும் உயர்கல்வியைத் தொடர்ந்து படிக்கவேண்டும். பள்ளிக்கல்வியை முடித்த பிறகு, அதாவது 12ஆம் வகுப்புக்குப் பிறகு தொடரும் கல்வியை உயர்கல்வி என்கிறோம். பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்கள், தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள, பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ, வேறு உயர்கல்வி நிலையங்களிலோ உயர்கல்வியைப் பெறலாம். அனைவரும் உயர்கல்வியைப் பெறும் வகையிலான கட்டமைப்புகள், தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. ஒரு காலத்தில் டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் என்று எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டார்கள். இப்போது எந்தப் படிப்பைப் படித்தாலும் படித்து முடிக்கும் முன்பே வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய மாணவர்களின் விருப்பமாக உள்ளது. 12ஆம் வகுப்பு இறுதியில் மாணவர் பெறும் மதிப்பெண்களும் அல்லது நுழைவுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களும் அதைத் தொடர்ந்து கல்லூரிகளில் சேரும் படிப்புகளுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, படிப்புகளைத் தேர்வு செய்வதிலும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதிலும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தங்களது திறமைகளைக் கண்டறிந்து, அந்தத் துறைகளில் அறிவைச் செலுத்தி படிப்பவர்களே வெற்றி காண்கிறார்கள். ஆசிரியர்கள் மலைகளாக நின்றால், மாணாக்கர்கள் ஆறுகளாகப் பெருகுவார்கள். ஆசிரியர் அணைக்கட்டுகளும் ஆவாராயின் சாஸ்திர நன்செய்கள் சாலவும் பயன்படும். -சி. சுப்பிரமணிய பாரதி, இந்தியா (15.12.1906) உயர்கல்வி படிப்பைத் தேர்வு செய்வது எப்படி? உங்கள் விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ற துறையைத் தேர்ந்தெடுங்கள். மேல்நிலை வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருக்கிறீர்களோ, அதற்கேற்ற கல்லூரிப் படிப்பைத் தெரிந்துகொள்ளுங்கள். படிப்புக்கான தகுதிகள் எவை? அந்தத் தகுதிகள் உங்களிடம் உள்ளதா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். மாணவர் சேர்க்கை முறை எப்படி நடக்கிறது? 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலா? அல்லது நுழைவுத்தேர்வு அடிப்படையிலா? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது எனில் அதற்கு முன்னதாகவே தயாராகுங்கள். பல்வேறு படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், 12ஆம் வகுப்புத் தேர்வுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ வெளியாகும். எனவே, சேர விரும்பும் நுழைவுத்தேர்வுக்கு முன்பே விண்ணப்பியுங்கள். அதற்குத் தயாராகுங்கள். சில நேரங்களில் உங்களையே நீங்கள் புரிந்துகொள்ளாததால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பில் ஆர்வமில்லாமல் போகலாம். எனவே, எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் உங்களின் உயர்கல்விப் படிப்பைத் தேர்வு செய்வது குறித்து சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் என்ன படிக்க வேண்டும்? என்பதை உறுதி செய்ய உங்களது பெற்றோர், உறவினர், நண்பர்கள் கட்டாயப்படுத்தக்கூடும்; அவர்களுக்காக ஆர்வம் இல்லாத படிப்பைத் தேர்வு செய்யாதீர்கள். கலை, அறிவியலைவிட மருத்துவம், பொறியியல் படிப்புகள் உயர்ந்தவை எனச் சிலர் கருதுகிறார்கள். கலைப்புலப் (Humanities) படிப்புகளில் என்ன உள்ளன? என்று கருதும் போக்கும் உள்ளது. படிப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என எதுவும் கிடையாது. எந்தப் படிப்பாக இருந்தாலும் படித்த, திறமையான மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். விரும்பும் கல்லூரியில், விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இல்லாமல் இருக்கலாம்; விருப்பமில்லாத கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இருக்கலாம். விரும்பும் கல்லூரியோ, பாடப்பிரிவோ கிடைக்காவிட்டால் அடுத்த விருப்பம் என்ன? என்பதை வரிசைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் ஆர்வம், திறன், மதிப்பெண், குடும்பச்சூழ்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உங்களின் எதிர்காலப் படிப்பைத் திட்டமிடுங்கள். உங்கள் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ற படிப்பு உங்களுக்குப் பயனளிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். வழிகாட்டும் ஆசிரியர்கள்! ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தனது வாழ்க்கையின் 12 ஆண்டுகளில் 24000 மணித்துளிகள், பள்ளியில் ஆசிரியர்களுடன் கல்வியறிவைப் பெற பயணப்படுகிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் தான், மாணவர்களது, இளமைக்காலத்தைச் சிற்பமாகச் செதுக்கி, அவர்களது தனித்திறனைக் கண்டுணர்ந்து, அதை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறார்கள். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களது ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், தங்களது அறிவால், வாழ்வால், நல் ஒழுக்கத்தால், மாணவர்களை ஈர்த்து, மாணவர்கள் தங்களைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள். -அ.ப.ஜெ. அப்துல் கலாம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆதாரம்: நான் முதல்வன்