நாம் மகிழ்ச்சியோடு இருக்க நல்ல உறவுகள் தேவை. நல்ல உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் உறவுகளை விட்டு நீங்கவும் திறன் தேவைப்படுகிறது. உறவுகளைக் கட்டமைக்க அன்பு, மரியாதை, நம்பிக்கை போன்றவை தேவை. கற்றல் நோக்கங்கள் பாடங்களைப் படிப்பது, ஒரு வேலையில் அமர்வது, நன்கு சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துதல். சிறந்த மனிதராக வாழத் திறன்களும் குணங்களும் முக்கியம் என்பதைப் புரியவைத்தல். திறன் வளர்ப்பு மாணவர்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பயனுள்ள முறையில் ஆக்கப்பூர்வமான வழியில் மேம்படுத்திக்கொள்ள பல்வேறு திறன்கள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு வகையான செயல்பாடுகளில் திறன் பெற வேண்டி இருக்கிறது. சைக்கிள் ஓட்டக் கற்க ஆரம்பிக்கும்போது நமக்குள் இருக்கும் தயக்கம், பயம், நன்கு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. திறன் வளர்ப்பின் அற்புதம் இதுதான். முயற்சியும் பயிற்சியும் திறன்கள் ஆகின்றன. திறன் மேம்பாடு நமக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. நம் சுய மதிப்பீட்டையும் வளர்க்கிறது. பல்வேறு சவால்களைக் கையாள உதவுகிறது. மாணவப் பருவத்தில் படிப்பு சம்பந்தப்பட்ட திறன்கள், கலைத்திறன்கள், விளையாட்டுத் திறன்கள், பொழுதுபோக்குத் திறன்கள், தங்கள் ஆளுமையை மெருகேற்ற உதவும் திறன்கள், பிறருடன் உறவாடும் உரையாடும் திறன்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு செயல்பாடுகளின் தேவைகளை உணர்ந்து அவற்றைப் பயிற்சி செய்து திறன்களாக மாற்றிக் கொண்டால் வாழ்க்கைப் பயணத்தின் பாதை, வெற்றிப் பாதையாகும். கல்வி தொடர்பான திறன்கள் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் நன்கு பேச எழுதப் படிக்கக் கற்க வேண்டும். பிற மொழிகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் அவற்றையும் கற்கலாம். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பது போல், பேசப் பேசத்தான் மொழி வசப்படும். தனிநபர் பேச்சு, எழுத்துப் பரிமாற்றம் தவிர, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற நாம் நினைத்ததைச் சரியாக வெளிப்படுத்த மொழித்திறன் தேவை. உறவாடுவதற்கும் உரையாடுவதற்குமான திறன்கள் நாம் மகிழ்ச்சியோடு இருக்க நல்ல உறவுகள் தேவை. நல்ல உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் உறவுகளை விட்டு நீங்கவும் திறன் தேவைப்படுகிறது. உறவுகளைக் கட்டமைக்க அன்பு, மரியாதை, நம்பிக்கை போன்றவை தேவை. நல்ல உறவுகளைத் தக்கவைக்க உரையாடல் திறன் மற்றவர்களைக் குறை சொல்லாமல் நம் உணர்வுகளைப் பகிர்தல், எப்போதும் உறுதியாகப் பேசுதல் இவை மிக முக்கியம். கலாச்சாரத் திறன்கள் நடனம் ஆடுவது, பாடுவது, படம் வரைவது, கவிதை எழுதுவது, கைவினைப்பொருள் செய்வது ஆகியவை நம் படைப்பாற்றல் திறன் வெளிப்பாடுகள் ஆகும். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது மேலும் மகிழ்ச்சியைக் கூட்டும். சோர்வாக இருக்கும்போது நம் மகிழ்ச்சியை மீட்டுத்தர உதவும். விளையாட்டுத் திறன்கள் சிறுவயதிலிருந்து ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வது உடல்நலத்திற்கும் மனமகிழ்ச்சிக்கும் நல்லது. ஏனெனில் சிறுவயதில் நாம் மேற்கொள்ளும் இத்தகைய உடல்நலம் சார்ந்த திறன், நமக்குப் பழக்கமாகி, நம்மில் ஓர் அங்கமாகிவிட்டால், வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியத்தைப் பேண உதவும். யோகா, உடற்பயிற்சி, ஓடுதல், நீச்சல் அடித்தல், கம்பு எறிதல் போன்ற தனி நபர் சார்ந்த திறன்களாக இருக்கலாம். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகளாக இருக்கலாம். விளையாட்டு, மூளையில் உள்ள உற்சாக ஹார்மோன்களைத் தூண்டி, நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும். பொழுதுபோக்குத் திறன்கள் பொழுதைச் சிறப்பாக ஆக்கப்பூர்வமாகக் கழிப்பதே திறன்தான். ஏனென்றால் இதன் அருமை தெரியாமல்தான், நாம் இன்று பொழுது போகவில்லை என்று ஓயாமல் மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு பொழுது போக்குகிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். கலைநயமான திறன் இல்லாவிட்டாலும் நம் வீட்டைச் சுத்தமாக வைப்பது, குழந்தைகளோடு விளையாடுவது, தோட்ட வேலை செய்வது, காய்கறிகள் வெட்ட, சமைக்கப் பழகுவது ஆகிய எதுவாக இருந்தாலும் கற்றல் என்பது ஓர் அனுபவம். உணர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் திறன் மன உணர்வுகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஈடுகொடுக்கத் தெரியவேண்டும். என் உணர்ச்சி என்னுள் இருந்து வருகிறது என்று அதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும். உணர்வுகளைக் கையாள, முதலில் உணர்ச்சிகரமான நிலையிலிருந்து விடுபட்டு, கொஞ்சம் இளைப்பாறி, அமைதியாக இருக்கும்போது பிரச்சினைகளின் மனம் தீர்வு பற்றி யோசிக்க வேண்டும். இப்படிப் பயிற்சி செய்தால் நாளடைவில் உணர்வுகளுக்கு ஈடுகொடுக்கும் திறனைப் பெறமுடியும். பள்ளிப் பருவத்திலேயே பல்வேறு ஆளுமைப் பண்புகளை வளர்த்துக்கொண்டால்தான் பின்னாளில் உயர்கல்வி படிக்கும்போதும், வேலை பார்க்கும்போதும், நாம் ஆளுமை நிறைந்தவராகச் செயலாற்ற முடியும். தோற்ற ரீதியான ஆளுமை: உயரமோ, குள்ளமோ, கறுப்போ, வெள்ளையோ - உடல்ரீதியான அழகைத்தான் பெரிதாக நினைக்கிறோம். உயரமான ஒருவர், கூன் போட்டால் அது தோற்றப்பொலிவாகாது. அதுபோல் தோலின் நிறத்தை அழகோடு ஒப்பிடுகிறோம். உண்மையான அழகு என்பது கம்பீரம், நேருக்கு நேர் பார்க்கும் பார்வை, தெளிவான பேச்சு, மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் குணம். திறன் என்பது செயல்களோடு மட்டும் நிற்பதில்லை. ஆளுமைத் திறனுக்கு பண்புகளும் தேவை. அறம்சார் நற்குணங்கள் திருடாமல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பொய் பேசாமல், ஏமாற்றாமல் இருப்பதுதான் அக அழகையும் புற அழகையும் மேம்படுத்தும். உண்மை, நேர்மை, பிறர் நிலையில் நின்று பார்த்தல், பொறுப்புணர்வு இவற்றைப் பற்றி எல்லாத் தருணங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்