கற்றல் நோக்கம் உயர்கல்விப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், தகவல்களைத் திரட்டுவதன் அவசியத்தை உணரச்செய்தல். மாணவர்கள் சேகரிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி படிப்பதற்காக கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டு இருப்பார்கள். அந்த மாணவர்கள், முன்னதாகவே சேகரிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன: 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, எந்தப் படிப்பில் சேரலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்பதை முன்னதாகவே முடிவு செய்யவேண்டும். ஒரு கல்லூரியில் விண்ணப்பித்து, இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? முன்னதாகவே நாம் சேர விரும்பும் கல்லூரிகளின் விருப்ப வரிசையைத் தேர்ந்தெடுத்துக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பில் சேர விரும்புகிறோமோ அந்தப் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் உள்ளிட்ட தகுதிகள் எவை என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் தகுதிகள் நம்மிடம் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துக் கொள்ளவேண்டும். நாம் சேர விரும்பும் படிப்பில் சேருவதற்கு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா அல்லது நுழைவுத்தேர்வு எழுத வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வு எழுத வேண்டியிருந்தால், அது எப்போது நடைபெறுகிறது, அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு, நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம், வினாத்தாள் வடிவமைப்பு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். 12ஆம் வகுப்புத் தேர்வுகளுக்குப் படிப்பதுடன், நுழைவுத்தேர்வுக்கும் தயாராக வேண்டும். இதற்கென அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் இலவசப் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறலாம். நாம் சேர விரும்பும் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் எப்போது தருகிறார்கள், விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் சேர விரும்பும் படிப்பு குறித்தும் அந்தப் படிப்பில் எந்தெந்த பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள் என்பது குறித்தும் ஏற்கெனவே அங்கு படிக்கும் தெரிந்த மாணவர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் அந்தப் படிப்பில் சேருவது பொருத்தமாக இருக்குமா என்பதை மாணவர்கள் முடிவு செய்ய வசதியாக இருக்கும். மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமெனில், முடிந்தால் அக்கல்லூரிக்கு நேரில் சென்று பார்ப்பதுடன், அக்கல்லூரியில் ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் சேர விரும்பும் கல்லூரியின் நிறை, குறைகள் தெரியவரும். கல்வி நிறுவனங்கள் குறித்து ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கிவிடக்கூடாது. பிரம்மாண்டமான கட்டடங்கள் இருப்பதால் மட்டுமே ஒரு கல்வி நிறுவனம் சிறந்தது ஆகிவிடாது. அங்குள்ள ஆய்வகங்கள், நூலகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கவனிப்பதும் முக்கியம். ஆதாரம்: நான் முதல்வன்