சாதிச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் அரசின் இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை, தாய் தந்தையின் சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அரசு வழங்கும் சாதிச் சான்றிதழ்களை நிரந்தரமாகப் பயன்படுத்தலாம். அதன் நகல்களைத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். வருமானச் சான்றிதழ் கல்வி உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு வருமானச் சான்றிதழ்கள் தேவைப்படும். வருமானச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் அரசின் இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குப் பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். வருமானச் சான்றிதழ் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தேவைக்கு ஏற்ப வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம். ஆதார் அடையாள அட்டை ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய அரசு வழங்கும் 12 இலக்க எண் கொண்ட தனிநபர் அடையாள அட்டையாகும். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் இந்த அடையாள அட்டை, இந்தியக் குடிமக்களுக்கு ஓர் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஓர் அடையாளச் சான்றும், முகவரிச் சான்றும், பிறந்த தேதிக்கான சான்றும் தேவைப்படும். ஆதார் சேர்க்கை மையத்துக்குச் சென்று ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆதார் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். இருப்பிடச் சான்றிதழ் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் இடம் பெற விரும்பும் மாணவர்கள் தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் படித்தவராக இருந்தால் இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. மற்றவர்கள் இருப்பிடச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்திருந்தால், அந்த மாணவர்கள் பொதுப் பிரிவின் கீழ் இடங்களைப் பெற அனுமதிக்கப்படுவார்கள். இருப்பிடச் சான்றிதழையும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்துப் பெறலாம். புகைப்படம், முகவரி ஆதாரம், பிறப்புச் சான்றிதழ், சுய உறுதிமொழி ஆகியவற்றுடன் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிச் சான்றிதழ் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் தேவைப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்திலோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ, இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான தகவல்களைக் கேட்டு அறியலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ், படிப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட மருத்துவ போர்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். விளையாட்டுச் சான்றிதழ் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு எனத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்குக் கீழ்க்கண்ட விளையாட்டுப் போட்டிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன: அத்லெட்டிக்ஸ், அத்ய பட்யா (கிளித்தட்டு போன்ற விளையாட்டு), பேட்மிண்டன், பால் பேட்மிண்டன், பேஸ் பால், பேஸ்கட் பால், பீச் வாலிபால், பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னூக்கர்ஸ், பாடி பில்டிங், பாக்ஸிங், கேரம், செஸ், கிரிக்கெட், சைக்கிளிங், ஃபென்சிங், ஃபுட்பால், கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, கோ கோ, கோர்ஃப் பால், மல்லகம்ப், மோட்டார் ஸ்போர்ட்ஸ், நெட் பால், பவர் லிஃப்டிங், ரோலர் ஸ்கேட்டிங், ரோவிங், ரக்பீ, செயிலிங், செபக் தாக்ரா, சூட்டிங், சிலம்பம், சாப்ட் பால், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ், ஸ்விம்மிங், டேபிள் டென்னிஸ், டெக்-வெண்-டோ, டெனிகாய்ட், டென்னிஸ், த்ரோபால், டிரைலத்தான், வெயிட்லிப்டிங், ரெஸ்லிங், உஷு (Wushuu), யாட்சிங், யோகா, சர்வதேசப் போட்டிகளில் வென்றவரா அல்லது பங்கேற்றவரா, தேசிய அளவிலான போட்டிகளில் வென்றவரா அல்லது பங்கேற்றவரா, மாநில அளவிலான போட்டிகளில் வென்றவரா? பங்கேற்றவரா... இப்படிப் பல்வேறு நிலைகளில் மாணவர்களின் விளையாட்டுச் சாதனைகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பெற்ற சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தனி ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு இருக்காது. ஆனால், அந்தப் படிப்புகளுக்குத் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் எடுத்திருக்க வேண்டியது அவசியம். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ் தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நல வாரியத்தின் உதவி இயக்குநர் அலுலகத்தில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு என்பதற்கான சான்றிதழைப் (Certificate of Dependency on Ex-servicemen) பெற வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லை என்றால், அம்மாணவர்கள், தொழில்முறைக் கல்வி பெறுவதை ஊக்குவிப்பதற்காக, சாதிப் பாகுபாடு இல்லாமலும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் அந்த மாணவர்களின் தொழிற்கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் சுய ஆதரவுப் படிப்புகளில் (Self Supporting Courses) படிக்கச் சேரும் மாணவர்களுக்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கச்சேரும் 5% மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 இலட்சத்துக்குக் குறைவாக இருக்கவேண்டும். பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்கு உதவும் திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்கள், தற்போது அரசு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். ஆதாரம்: நான் முதல்வன்