கற்றல் நோக்கங்கள் தேர்வு நேரங்களில் பதற்றப்பட வேண்டியதில்லை என்பதை எடுத்துரைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுதல். தேர்வு நேரங்களில் எப்படிப் படிக்கவேண்டும் என்பதை மாணவர்களுக்குப் புரிய வைத்தல். தேர்வு அறையில் தேர்வு எழுதும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறுதல். சீன மூங்கில்கள் சீன மூங்கில்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலர் அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். சிலருக்கு அது பற்றித் தெரிந்திருக்காது. அது வித்தியாசமான தாவரம். மற்ற மரங்களின் வளர்ச்சி படிப்படியாக இருக்கும். அது வெளிப்படையாகத் தெரியும். ஆனால், சீன மூங்கில்கள் அப்படியல்ல. முதல் நான்கு ஆண்டுகள், அதன் வளர்ச்சி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால், இப்படியே குட்டிச் செடியாக இருந்துவிடும் என்று கருதினீர்கள் என்றால் நீங்கள் அந்த மரத்தைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். ஆனால், ஐந்தாவது ஆண்டில் ஐந்து வாரங்களில் அதிசயத்தக்க வகையில் அந்த மரம் பிரமாண்டமாக வளர்ந்துவிடும். அதுபோல தான் பல மாணவர்களின் படிப்புத் திறன் படிப்படியாக வெளிப்படும். சில மாணவர்களின் படிப்புத் திறன் குறிப்பிட்ட காலகட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும். தேர்வுக்குத் தயாராகுங்கள் படிப்பதற்கு முன்னர் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும். தேர்வு பயம், மனநெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வு மனப்பான்மை, அதீத நம்பிக்கை, படிக்கும் திட்டம் இல்லாமை, மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தைச் செலுத்தாமை போன்ற விஷயங்கள் நம்மை அண்டவிடக்கூடாது. மாணவர்களின் அடுத்தகட்டப் படிப்பை தீர்மானிக்கும் முக்கியக் காரணி தேர்வுகள். பள்ளிகளில் பாடங்களை எப்படிப் படித்திருக்கிறீர்கள் என்பதை அறிவுபூர்வமாக அறிய உதவும் சோதனை தான் தேர்வுகள். அதாவது, உங்களது கல்வித்திறனை அளக்கும் ஓர் அளவுகோல் தான் தேர்வுகள். தேர்வுக்கு எவ்வளவு நேரம் படித்தீர்கள் என்பதைப் பொறுத்து மதிப்பெண்கள் போடப்படுவதில்லை. எப்படிப் படித்தீர்கள் என்பதைப் பொறுத்தும் மதிப்பெண்கள் போடப்படுவதில்லை. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி விடை அளிக்கிறீர்கள் என்பது தான் முக்கியமானது. அதைப் பொறுத்து தான் உங்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். எந்த மாதிரி படிக்க வேண்டும் என்பதற்கும் எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கும் வரையறை எதுவும் கிடையது. சிலர் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் படிக்கலாம். சிலர் மாலையில் படிக்கலாம். சிலர் நள்ளிரவில் விழித்துப் படிக்கலாம். எந்த நேரம் படிக்கிறோம். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி கவனத்துடன் படிக்கிறோம் என்பது முக்கியம். தேர்வுக்கு முந்தைய நாளில் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்க வேண்டியதில்லை. தேர்வுக்காக படிப்பது என்பது ஒரு நாளுடன் மூட்டை கட்டி விடக்கூடிய காரியம் இல்லை. தொடர்ந்து செய்ய வேண்டிய வேலை. பாடங்களைத் திரும்பத் திரும்ப படித்துப் பார்க்கும் போதுதான் பாடங்கள் மனதில் தங்கும். படிக்கும் பாடங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அப்போது அந்தப் பாடங்கள் என்றைக்கும் மறந்து போகாது. பாடங்களைப் படிப்பதை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தால் படிக்க வேண்டிய பாடச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். சிறிது சிறிதாகத் தொடர்ந்து படித்துக்கொண்டே வந்தால் மலைப்பாகத் தோன்றாது. நிறைய பாடங்களை ஒரே நாளில் ஒரே நேரத்தில் படித்து மனதில் பதிய வைத்துவிட முடியாது. தேர்வு நேரத்தில் புதிதாக ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கினால் அது சிரமமாக இருக்கும். கஷ்டமான பாடத்தை அந்த நேரத்தில் படிக்க நினைத்தால் அது புரியாது. எனவே, கடினமான பாடங்களில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டு தெரிந்துகொள்ளத் தயங்கக்கூடாது. பள்ளிகளில் படிக்கும்போதே அந்தந்தப் பாடங்களை அவ்வப்போது படித்து வரும் மாணவர்களுக்கு அவ்வளவாக பிரச்சினை இருக்காது. பாடங்களில் பிடிக்காத பாடங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால், சில மாணவர்கள் தங்களுக்குப் பிடிக்காது என்று சில பாடங்களைக் கருதுவதுண்டு. அவ்வாறு விருப்பமில்லாமல் படித்தால் பாடங்கள் எப்படி நினைவில் தங்கும்? பாடங்களை நேசித்துப் படிக்க வேண்டும். அத்துடன் படிக்கும்போது, பாடத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் நன்றாகத் தெரிந்த பாடங்கள், இன்னமும் சரியாகத் தெரியாத பாடங்கள் என்று பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாகத் தெரிந்த பாடங்களில் மீள்வாசிப்பு செய்வது முக்கியம். அதே சமயத்தில் சரிவர படித்து முடிக்காத பாடங்களுக்குக் கூடுதல் நேரம் கொடுத்து அந்தப் பாடங்களைப் படித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதில் உள்ள வினா-விடைகளைத் தனித்தனிப் பகுதிகளாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் படித்து முடித்த பிறகு, சிறிது நேரம் விட்டு, அடுத்த பகுதிகளைப் படிக்க வேண்டும். தொடர்ந்து படிக்கும்போது, சோர்வு ஏற்படும். சோர்வு நேரங்களில் படித்த பாடங்கள் மனதில் நிற்காது. எனவே, சிறிது நேரம் இடைவெளி விட்டுப் படிக்கலாம். பாடப்புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும். பாடங்கள் குறித்து வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கொடுக்கின்ற விளக்கத் தொகுப்புகளையும் நோட்ஸ்களையும் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாடப்புத்தகங்களிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். எனவே, வழிகாட்டி நூல்களையே முழுவதும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாடங்களைப் புரிந்து படித்தால் கேள்விகளை எப்படிக் கேட்டாலும் எளிதாகப் பதில் எழுதிவிட முடியும். சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றைக் குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அதனால் அவை மறந்துபோகாது. படித்ததை எழுதிப் பாருங்கள். படங்களை வரைந்து பாருங்கள். கணக்குகளைப் போட்டுப் பாருங்கள். வீட்டில் மாதிரித் தேர்வுகளை நீங்களே எழுதிப் பார்க்கலாம். படித்த பாடங்களை நீங்களே சொல்லிப் பார்க்கலாம். படித்ததை எழுதிப் பார்க்கலாம். இது போன்ற பயிற்சிகளுள் மாணவர்கள் தங்களுக்கு எது ஏற்றதோ அதைக் கடைப்பிடிப்பது நல்லது. தேர்வு நேரத்தில் மற்ற மாணவர்களுடன் படிப்பைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும். ‘அவர்கள் அதைப் படித்துவிட்டார்களே, நாம் படிக்கவில்லையே' என்று மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளக்கூடாது. மாணவர்களில் பலர், வகுப்பறை படிப்பைத் தவிர, தனிப்பயிற்சிக்குச் (டியூஷன்) செல்வார்கள். டியூஷனில் படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடாது. வீட்டுக்கு வந்தும் பாடங்களைப் படிக்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதனைத் தவற விடக்கூடாது. அதே போல மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், அதனையும் சிறப்பாக எழுத முழுமூச்சுடன் படிக்க வேண்டும். மாதிரித் தேர்வுகள் எழுதும்போது தான் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவும். எந்தக் கேள்விகளுக்கு நன்றாக பதில் எழுத முடிகிறது, எந்த கேள்விகளுக்கு விடையளிக்க திணறுகிறோம் என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க உதவியாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் படிப்பது, படித்தவற்றை நினைவில் நிறுத்த உதவும். படிக்கும்போது பாடத்தில் மட்டும் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் விரைவாகப் படிக்க முடியும். படிப்பது என்பது சுவாரசியமான அனுபவம். விரும்பிச் செய்யும் வேலையாகப் படிப்பதை வைத்துக்கொண்டால் பாடங்கள் கசக்காது. இனிக்கும். படிப்பினால் கிடைக்கும் நன்மைகளையும் எதிர்கால ஒளிமயமான வாழ்க்கையையும் நினைத்துப் பார்த்துக் கொண்டால் படிப்பதில் ஆர்வம் தானாக வரும். படிப்பதற்கு முன்னர் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும். தேர்வு பயம், மன நெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வுமனப்பான்மை, அதீத நம்பிக்கை, படிக்கும் திட்டம் இல்லாமை, மனதை ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்தாமை போன்ற விஷயங்களை நம்மை அண்ட விடக்கூடாது. தேர்வு நேரங்களில் பள்ளிப் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமாக இருந்தாலும்கூட, திரைப்படம், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, செல்போன் பயன்பாடு போன்ற கவனச் சிதறல்களும் ஏற்படக்கூடும். தொலைக்காட்சி பார்ப்பதிலேயே முழு நேரத்தை செலவிடுவது, செல்போனை எந்நேரமும் கையில் வைத்துக்கொண்டு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப்... என்று மனதை அலைபாய விடக்கூடாது. இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடு மாணவர்களுக்கு அவசியம். படிக்கின்ற காலத்தில் பொழுதுபோக்கே கூடாதா? என்ற மாணவர்களின் கேள்வி நியாயமானதுதான். தேர்வுக்காக உங்களது வழக்கமான பணிகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டியதில்லை. மனதுக்கும் உடலுக்கும் சற்று ஓய்வு தேவை. அதற்கு இது போன்ற வழக்கமான செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபடுவது உற்சாகத்தை அளிக்கும். அதே போல, சிறிது நேரம் விளையாட்டுகளில் ஈடுபடுவதோ அல்லது வாக்கிங் போவதோகூட நல்லது தான். அல்லது, சிறிது நேரம் குட்டித் தூக்கம் போட்டாலும் அது பாதகம் இல்லை. அதற்காக, பகலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு நீண்ட நேரம் தூங்கிவிடக்கூடாது. தேர்வு நெருங்கும் நேரத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்னதாகவும்கூட நேர மேலாண்மை (Time Management) முக்கியம். எந்த நேரத்தில் எந்தப் பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்பதை முன்னதாகவே தீர்மானித்துப் படிக்க வேண்டியது அவசியம். முக்கியமான கேள்விகளுக்கு விடைகளை நன்கு படித்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடைகளைப் படித்து வைத்துக் கொள்ளவேண்டும். அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களும் சராசரி மாணவர்களும் ஒரு மதிப்பெண் கேள்விகளை நன்கு படித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தேர்வு நேரத்தில் உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். அதற்காக பள்ளி நாட்களில் உடல் ஆரோக்கியம் அவசியம் இல்லையா என்று கேட்டுவிடாதீர்கள். படிக்கின்ற காலத்தில் சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனால் பிரச்சினை இல்லை. சிலநாள் விடுமுறை எடுத்துக்கொண்டாலே போதும். தேர்வு நேரத்தில் ஒவ்வொரு நாளும் முக்கியம். உடல் நலம் சரியில்லாமல் சில நாட்களை இழக்க நேர்ந்தால், நமது கால அட்டவணைப்படி பாடங்களைப் படிக்க முடியாது. எனவே, உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நேரத்தில் படிக்க வேண்டியதுதானே முக்கியம். சாப்பிடுவது என்ன அவ்வளவு முக்கியமா? என்று கேட்டால், முக்கியம்தான் என்று சொல்ல வேண்டும். குறிப்பாக, நேரத்திற்கு உணவைச் சாப்பிட வேண்டும். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடக்கூடாது. அதே சமயம், படிப்பதற்கு முன் வயிறு நிறைய உணவு உண்பதைத் தவிர்க்கவும். வயிறு நிறைய சாப்பிடும்போது, உணவு செரிமானத்துக்காக வயிற்றுப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். அதனால் தான், சாப்பிட்டவுடன் உற்சாகம் குறைந்து தூக்கம் வருவது போல இருக்கிறது. எனவே, அளவாகச் சாப்பிடவும். தேர்வு நேரம் என்றாலும் உடற்பயிற்சி செய்ய மறக்கக்கூடாது. நீண்ட நேர விளையாட்டுக்கு நேரம் இருக்காது. எனினும், சிறிது தூரம் வெளியே நடந்து சென்று வரலாம். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யலாம். தேர்வு நேரத்தில் உடற்பயிற்சிக்காக நேரத்தை வீணாக்குவது சரியா என்று சிலருக்குத் தோன்றலாம். சிறிது நேர உடற்பயிற்சி மனஅழுத்தத்தைக் குறைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவியாக இருக்கும். சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்வதோ யோகா பயிற்சி செய்வதோ படிப்புக்கிடையே பதற்றத்தைத் தணிக்க உதவும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட தேர்வு என்றாலே பயப்படுகிறார்கள். சுமாராகப் படிக்கும் மாணவர்கள்கூட பயப்படுகிறார்கள். பள்ளித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பொதுத்தேர்விலும் குறைந்த மதிப்பெண்தான் கிடைக்கும் என்று விரக்தி அடைய வேண்டியதில்லை. எப்படியும் தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற அசட்டுத் துணிச்சல் இருக்கக்கூடாது. அதே சமயம், மாணவர்கள் தேர்வுகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதுவரை நன்றாகப் படித்த மாணவர்கள் தொடர்ந்து நன்றாகப் படிக்க வேண்டும். இதுவரை, சுமாராகப் பாடங்களைப் படித்தவர்கள் மேலும் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இருக்கின்ற காலத்தை முறையாகப் படிக்கப் பயன்படுத்தினாலே போதும். தேர்வில் வெற்றி பெறமுடியும். தேர்வுகளும், மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கை என்று கருதிவிட வேண்டாம். ஆனாலும், மதிப்பெண்களை வைத்துதான் நாம் விரும்பிய படிப்புகளில் சேரமுடியும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இலக்கு முக்கியம். அதனை நோக்கிய சரியான பயணமும் முக்கியம். சராசரி மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற பலரும்கூட இப்போது வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு தேர்வைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். ஆதாரம்: நான் முதல்வன்