ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் நிரலாக்கம், தரவு அமைப்புகள், பைத்தானைப் பயன்படுத்தி படிமுறைத் தீர்வு போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் (IIT Madras NPTEL) தமிழில் மொழிபெயர்த்துள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் என்பிடெல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைக்கின்றன. மேலும், 906 மணி நேரத்திற்கு வீடியோ உள்ளடக்கத்திற்கான ஆடியோ உட்பொதிகளும் கிடைக்கின்றன. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை அணுகுதல் மற்றும் புரிதல் குறித்து கற்போரிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. என்பிடெல் பாடங்கள் அசாமிய, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் என்பிடெல்லின் மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை https://nptel.ac.in/translation இணையப்பக்கத்தில் காணலாம் கீழ்க்காணும் - சிறப்பு அம்சங்கள் என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) [NPTEL (National Programme on Technology Enhanced Learning)] என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2003-ம் ஆண்டு ஐஐடிக்கள், ஐஐஎஸ்சிக்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். என்பிடெல் தனது நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் எல்லோருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு செமஸ்டருக்கும் 22 வெவ்வேறு துறைகளில் 700-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான சான்றிதழ்களை என்பிடெல் வழங்கி வருகிறது. தற்போது வரை, 163 பொறியியல் படிப்புகள் உள்பட 244 என்பிடெல் படிப்புகளில் 20,000 மணி நேர வீடியோ உள்ளடக்கம் வெற்றிகரமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. துல்லியத்தை உறுதி செய்வதற்கும் ஒட்டுமொத்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் (ஒலிமாற்றம் செய்யப்பட்டவை) இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிரான்ஸ்க்ரிப்ட்கள் எளிதான குறிப்புகளுக்காக புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. என்பிடெல் இணையதளத்தில், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பக்கத்திலும், ஸ்வயம் (Swayam) இணைய முகவரியிலும் தற்போது பல்வேறு பிராந்திய மொழிகளில் 980 புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்