வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் (Wadhwani School of Data Science & AI) தொடங்க சென்னை ஐஐடி-யின் சிறந்த முன்னாள் மாணவரான திரு. வாத்வானி ரூ. 110 கோடி நன்கொடை அளித்திருப்பதாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் [Indian Institute of Technology Madras (IIT Madras)] தெரிவித்துள்ளது. உலகளவில் சிறந்த செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளில் ஒன்றாக தரத்தை உயர்த்துவதுடன், தரவு அறிவியல் மற்றும் செயற்கைத் தொழில்நுட்பம் தொடர்பாக அரசின் கொள்கை வகுப்போருக்கு ஆலோசனை வழங்குவதே இதன் நோக்கமாகும். நான்காம் தொழிற்புரட்சியில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை முக்கிய நகர்வுகள் என்பதால், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தேவை மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு ஐஐடி மெட்ராஸ் இந்த உயர்தரப் பள்ளியைத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 'பொறுப்பான செயற்கை நுண்ணறிவு' உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். வழங்கப்படும் படிப்புகள் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் வழங்கப்படும் படிப்புகள் வருமாறு: செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் பிடெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்டெக் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் எம்எஸ் & பிஎச்டி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் இணை எம்.எஸ்சி தரவு அறிவியலில் சர்வதேச பல்துறை முதுநிலைப் பாடத்திட்டம் தரவு அறிவியலில் பல்துறை இரட்டைப் பட்டம் தொழில்துறை செயற்கை நுண்ணறிவில் இணையதளம் சார்ந்த எம்டெக் மாணவர் சேர்க்கை இதற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 2024-ல் தொடங்கும். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இணை எம்எஸ்சி பாடத்திட்டம் 30 மாணவர் சேர்க்கையுடன் தொடங்கப்படும். சர்வதேச பல்துறை முதுநிலை பாடத்திட்டமும் இப்பள்ளியில் இடம்பெறும். இலக்குகள் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டும் இயல்பாகவே பல்துறைக் களங்களாகும். டொமைன் வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரிடையே நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்கி, ஏற்கனவே உள்ள அணுகுமுறைகளுடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் தீர்வுகள் உருவாக்கப்படும். மாணவர்களுக்கு முக்கிய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள், தரவு சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை கடைபிடிக்கும் பல்துறை வடிவமைப்பு போன்றவை எங்களது பல்வேறு பட்டப்படிப்புகளில் கற்பிக்கப்படும். தொழில் வல்லுநர்கள், சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திருக்கும். பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான பகுதிகள் விரிவான பல்துறை ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் ஐஐடி மெட்ராஸ் முன்னிலை வகிக்கும். முக்கிய அடிப்படை ஆராய்ச்சியையும், பயன்பாட்டு ஆராய்ச்சியையும் இந்த புதிய பள்ளி ஒருங்கிணைக்கும். இப்பள்ளியின் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான பகுதிகள் வருமாறு: சுகாதாரம் வேளாண்மை ஸ்மார்ட் நகரங்கள்- போக்குவரத்து நிதிப் பகுப்பாய்வு உற்பத்தி எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி தொகுப்பியக்க உயிரியல் ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்