இளங்கலை அறிவியல் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் பட்டப்படிப்பு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) மேலாண்மைக் கல்வித் துறை (Department of Management Studies - DoMS) மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் பல்துறை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்பில் சேருவோரை வணிகரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடி மெட்ராஸ்-ன் இளங்கலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இக்கல்வி நிறுவனம் வழங்கும் இதர இளங்கலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும். மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் இந்தத் தனித்துவமான பிஎஸ் பாடத்திட்டம், வலுவான பகுப்பாய்வு திறன்களைக் கொண்ட மேலாண்மை நிபுணர்களின் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள தொழில்நுட்பம், மேலாண்மை, தொழில்முனைவு சுற்றுச்சூழல் அமைப்பு இப்படிப்பில் பயன்படுத்தப்படுகிறது. வயது மற்றும் இருப்பிடப் பிரச்சனைகள் இன்றி அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பாடத்திட்டம் உயர்தர தரவு சார்ந்த மேலாண்மைக் கல்விக்கான சிறந்த முன்முயற்சியாகும். பணிபுரியும் நிபுணர்கள் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பாடத்திட்டத்தைப் பொறுத்து, இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்படலாம் அல்லது தொலைதூர மேற்பார்வையாளர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படலாம். முக்கிய தேதிகள் இப்படிப்பின் வகுப்புக்கள் ஜூன் 2026ல் தொடங்கும். இதற்கு விண்ணப்பிக்க மே 31, 2026 கடைசி நாளாகும். பாடத்திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரங்களை பின்வரும் இணையதளத்தில் காணலாம் - https://study.iitm.ac.in/mg விண்ணப்பிக்கத் தகுதிகள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவர்கள் உட்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். வயது வரம்பு, மாணவர் சேர்க்கை வரம்புகள் எதுவும் இல்லை. கற்பவர்கள் இப்படிப்பை தனிப் பட்டப்படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்துகொண்டே தொடரலாம். விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்தப் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு https://study.iitm.ac.in/mg/ இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்